புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

மூன்றாண்டுகள்,
மகிழ்ச்சி தவிர்தது
மனம்
ஏதுமறியா நாட்கள் ...
பாஸ் பண்ணுகிற
பேருந்து அட்டையில்
பெண்
பெயர்தேடிய கண்கள் ...
கமலா ? ரஜினியா ?
கட்டிப்புரண்ட
தெரு
கை கலப்புகள் ...
எத்தனையோ புத்தகங்கள்
இருந்த போதிலும்
எழுதிய
ஒரே நோட்டு ...
ஆறுபேர் அடித்து
அணைவரும் உளறிய
ஒற்றை
பியர் பாட்டில் ...
பாலகுமாரன் சுஜாதா
படிக்காமலே புளுகிய
அவர்
புகழான நாவல்கள் ...
தேவியில் பைலட்டில்
துளிகூட புரியாமல்
அலசிய
ஆங்கில படங்கள் ...
திங்களன்று பரிட்சைக்கு
ஞாயிறன்று தேடிய
பயிலாத
பாடக் குறிப்புகள் ...
ஆட்டம் புரியாதவரும்
ஆடுவதை பார்ககவைத்த
ஸ்டெஃபி
சபாட்டினிகள் ...
எதிர்பார்ப்பு ஏதுமில்லா
எப்போதும் சுற்றிவரும்
தோள்
கொடுத்த தோழமைகள் ....
இப்போதும் ஞாபகத்தில்
எல்லாமே நினைவுகளில்
நினைவு மறந்த வேளைகளில்
நிகழ்கால வேலைகளில் ...
எங்கிருந்தோ ஒரு பாட்டு
எல்லாவற்றையும் கிளறிவிடும்.
நான்கு நிமிட பாடலொன்றில்
மூன்று வருடம் வாழ்ந்துவிடுவேன் ...