பாறைவாதிகளின் உலகம்

மிகவும் இயல்பாக
உரைநடை எனும்
நீர்மமாக
வழிந்து வந்தது
ஒரு கவிதை !

அதை
அப்படியே விட்டிருக்கலாம் !

கவிதை
ரொம்ப நீர்மமாக
இருக்கிறதே
என்றெண்ணி
நவீனம் எனும்
அடுப்பிலிட்டு
சுண்டக் காய்ச்சியதில்
ஒரு பாறையைப் போல
இறுகிப்போனது !

பசியோடும்
தாகத்தோடும்
வந்த சிலர்
அந்தப் பாறையை
வெறுமனே
பார்த்து மட்டுமே
சென்றார்கள் !

இன்னும் சிலர்
பாறைகளின் உலகத்திலிருந்து
வருவதாகச் சொல்லிக்கொண்டு
எனது பாறையை
ஒரு சிற்பமென்றும்
நானொரு சிற்பியென்றும்
கூறி
என்னை அவர்களின்
உலகத்துக்கு
இழுத்துச் சென்றார்கள் !

அங்கே
மூக்கிலும் வாயிலும்
உதிரம் வடியும்
ஒரு சிற்பத்தைக்காட்டி
" பார்
உயிருள்ள
ஒரு சிற்பத்தை "
என்றார்கள் !

மேற்கத்திய வீச்சம்
அடித்தது
அந்தச் சிற்பத்தின்
உதிரத்தில் !

சோகம் வழியும்
மனிதக் கண்கள்
மட்டும் கொண்ட
மற்றொரு சிற்பமும்
அங்கிருந்தது !

ஒரு பக்க முலையை
அறுத்து
கைகளில் ஏந்தியபடி
இன்னொரு
பெண் சிற்பமும் !

பசிகொண்ட சிற்பம்
என்று
ஒன்றைக் காட்டினார்கள் !
அது
தன் வயிற்றைக்கிழித்து
குடலை எடுத்து
வாய்க்குள்
இட்டுக்கொண்டிருதது !

நான்
அதற்குமேல்
அங்கிருக்க முடியாமல்
" நான் சிற்பியல்ல
நான் சிற்பியல்ல "
என்று கத்தியபடியே
எனது
எளிய உலகம்நோக்கி
தலை தெறிக்க
ஓடத்தொடங்கினேன் !


======================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Jul-14, 9:36 pm)
பார்வை : 116

மேலே