உணர்வுகளை உசுப்பும் பசப்பி-பொள்ளாச்சி அபி

"உள்ளத்தில் நச்சரிக்கின்ற வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்;கச் செய்வதுதான் கவிதை..!"---- என்ற உணர்வோடுதான் அனைவரும் எழுதிவருகின்றனர். இவ்வாறு எழுதப்படுவனவெல்லாம் எப்போதேனும் வாசித்துவிட்டு,அவர் ஒரு நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது, அந்தக் கவிதையிலிருந்து ஒருவரியேனும் மனதிற்குள் ஊசலாடிவிட்டுப் போனால்..அந்தக் கவிதை அந்த அளவில் வெற்றிபெற்ற கவிதையாகி விடுகிறது.இப்படியொரு அனுபவம் எனக்கும் வாய்த்தது.

“நெஞ்சில் முளைத்த காதல்,
கண்ணில் விதைத்த காதல்..
கவனமாய் எழுதினேன்
கிறுக்கலாய்ப் போனது
கிறுக்கித் தள்ளினேன்
கவிதையானது
காரணம் காதல்..” என்ற வரிகளில் இருந்த முரண் சுவை,என்னை ஆட்டிவைத்தது.

ஒரு குழந்தையின் வெள்ளந்தியான வாய்மொழிபோல்,பசப்புகளற்றுத் தோன்றிய இவ்வரிகளால் ஈர்க்கப்பட்டு,கவிஞர் பசப்பியின் கவிதைகளைத் தொடர்ந்தேன். நிறைய சிந்தனைத் தெறிப்புகள்..,வழக்கமான பல கருக்களையும் வித்தியாசமாக அணுகுதல்..என்று ஆங்காங்கே சில கவிதைகள் ஜாலம் காட்ட,அது குறித்து இந்த வாரம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றிற்று.

ஏராளமான கவிதைகளை பல்வேறு தலைப்புகளின் எழுதியுள்ள அவருடைய படைப்புகளிலிருந்து,கடந்த ஒருமாதத்தில் வெளியானவற்றை மட்டும் முழுமையான வாசிப்புக்காக எடுத்துக் கொண்டேன்.

இப்புவியை, விரும்பும் வகையில் மாற்றவேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும்தான் இருக்கிறது. அதற்கான வழிகளில் வௌ;வேறு வகையாக மாறுபடுகிறோம்.
ஆனால்,கவிஞர் பசப்பியோ,பசுமை பூமி பத்து-எனும் கவிதையில், நான் கேட்பதைத் தாருங்கள்,பசுமை பூமியாக பத்து செய்து தருகிறேன் என்கிறார். இருக்கும் பூமியையே குலைத்துக் கொண்டிருக்கும் நாம்,எப்படி அதனைத் தரமுடியும் என்ற கேள்வி எழும்போது,ஒட்டு மொத்த மனிதகுலத்தின் பிரதிநிதியாய் நின்று நாம் வெட்கப்படத்தான் வேண்டியதாயிருக்கிறது.பசுமைகளைத் தொலைத்து வருவது வேதனையாகவும் இருக்கிறது.

அவரது பரிணாமம் எனும் கவிதை,ஐந்தறிவுதானே..என்று மிகச் சாதாரணமாய் நாம் கடந்துபோகும் விலங்குகளிடம், மனிதனுக்கு தேவையான பண்புகள் இருக்கின்றன.ஆனால்,உயர்திணை என்று பீற்றிக் கொள்ளும் மனிதனிடமிருந்து,காணாமல் போன குணங்களை நினைத்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

சிறுசிறு கவிதைகளாக அவர் பதிவு செய்துள்ள பலவற்றில் தெறித்துக் கிடக்கிறது நமக்கான சிந்தனை.

“தேய்வன வரிசையில்
தேசியத்துக்கு முதலிடம்..
வளர்வன வரிசையில்
சுரண்டலுக்கு முதலிடம்..” - இஇக் குறுங்கவிதையின் தலைப்பு நம் இந்தியா..!..அழகான முரணில்,நாட்டின் நிலையை சுவைபடச் சொல்லி நிற்பதில்,குறுகத் தரித்த குறள்போல,கவிதை வித்தை காட்டுகிறது.

அதேபோல், மனிதம் எனும் கவிதையில், “நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில் மாண்டு கிடக்கும் நாய்போல,மதிப்பற்றுப் போனது மனித வாழ்க்கை..! – தினமும் பயணம்போகும் எல்லோரும் ஏதோவொரு இடத்தில் இப்படிப்பட்ட காட்சியைப் பார்ப்பது சாதாரணம்தான். ஆனால்,சாதாரணமாய்க் கடந்துவிடும் சாமானியர்களாய் நாம் இருக்கும்போது,ஒரு கவிஞனின் பார்வையில் சாதாரணங்கள் எப்படி படைப்பாகிறது என்பதற்கு அருமையான உதாரணம்.அதுவும் படைப்பையும் மனிதனின் வாழ்வியலோடு எடுத்துச் சொல்லும்போது,கவிதை மனதைக் கவர்ந்துவிடுகிறது.

பெண் என்றாலே..எனும் கவிதை, ராமாயணக் காலம் முதல் நவீன சட்டத்தின் ஆட்சிவரை பெண்களின் கையறுநிலையை விளக்குகிறது.
சமூகத்தால் இழைக்கப்படும் தவறுகள் எல்லாவற்றிலும் பெண்கள் பாதிக்கப்படும்போது,அந்தப் பாதிப்புக்கும் காரணமாக பெண்களே இருக்கிறார்கள்..என்று பழியைத்தூக்கி அவள் தலையிலேயே போடும்,ஆணாதிக்கத்தின் கயமைத்தனத்தை தோலுரிக்கிறது இந்தக்கவிதை.

ஆவணப்படுத்தப் படாமலேயே இருக்கிறது “தந்தைப் பாசம்” என்பதில் அவரது ஆதங்கம் தெரிகிறது.-- கவலை வேண்டாம் தோழரே..உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக, இத்தளத்தில் தோழர் ராம்வசந்த் தந்தையைக் குறித்து எழுதியுள்ள ஒரு கவிதை நல்ல ஆவணம்தான். நிறையத் தோழர்கள் தளத்தில் எழுதியிருக்கவும் கூடும். வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் நீங்களும் பதிவு செய்யுங்கள்.தந்தைப்பாசம் குறித்து “எனதருமைத் தோழரே..” எனும் ஒரு கவிதையை நானும் எழுதியுள்ளேன்.இன்னும் நிறைய எழுதுவோம்.!—

தீராத சண்டையில் எப்போதும் தோற்கவே விரும்புகிறேன் குழந்தையிடம்..! எனும் கவிஞரது குழந்தைப் பாசமும் குறிப்பிடத்தக்கது.

மறவாதே நீ..எனும் கவிதை ஒவ்வொருவருக்கும் உற்சாகமூட்டும் அருமருந்து என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு துளி வியர்வையின் உள்ளே..ஒரு வெற்றியையேனும் வைத்துக் கொண்டேதான் சொட்டுகிறது..எனும் வரிகளும்,நீ ருசித்த வெற்றிப்பழத்தில்,அடுத்தவருக்கான வாய்ப்புவிதை ஒளிந்தே இருக்கிறது..மறவாதே நீ..! என்பது புதிய ஆக்கபூர்வமான சிந்தனை..!

வீடிருக்கு..வசிக்க இயலாது,தெருவிருக்கு நடக்க இயலாது..! என்ற வரிகள்,யுத்தம்..எனும் கவிதையில் உள்ளன. யுத்தத்தின் கோரமான விளைவு குறித்து,அவர் சொல்லிச் செல்லும் பாணியில்,நம் மனசுக்குள் எழும்,அதன் காட்சிப் படிமம் நெஞ்சை அறுக்கிறது.அது கவிதையின் வெற்றியாகப் பார்ப்பதைவிட,உள்ளத்தைச் சுடும் உண்மையாகவே பார்க்கலாம்.

இசையும்,புல்லாங்குழலும் இவர் கவிதையில் பேசிக் கொள்வது மிக அழகு.ஒன்றோடு ஒன்று சாரும்போது,அது மற்றொன்றாக மாறுவதை ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறார்.

இயற்கைக்கு அநீதி இழைத்துவிட்டு,இரங்கல் செய்தி வாசிக்கும் மனிதா..,உன் ஆறறிவும் வீணாகிப் போனதோ..? என்று கேள்வியெழுப்பும் அவரது இயற்கையை வாழவிடு கவிதை,மனிதன் இயற்கையை வஞ்சித்த கதையைச் சொல்கிறது.

வீடு எனப்படுவது..என்ற கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளுள் ஒன்று.மிகச் சாதாரணமாய் முதலில் வாசிக்கப் படும் இந்தக் கவிதை,இறுதியில் நம்மை ஒரு அதிர்வுக்குள்ளாக்கிப் போகின்ற அனுபவத்தை நீங்களும் உணரலாம்.

என் பயணம் என்ற கவிதை,நமது வாழ்க்கைப் பயணத்தை குறியீடாக வைத்துப் பின்னப்பட்ட அருமையான படிமக் கவிதை.படிமம் என்பதை மிகச்சரியான கருவுக்காக பயன்படுத்தப்பட்ட கவிதை என்றும் சொல்லலாம்.சமூகத்தில் நிலவும் அன்றாட யதாhத்தங்களையும், மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு,வெறுமனே திரிந்து கொண்டிருப்பவர்களையும் வெகு நுட்பமாக கிண்டல் செய்யும் இக்கவிதை,கவிஞர் பசப்பியின் கவிதை புனையும் திறமைக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு.

உறவை விட்டு,என் அன்புக் கணவா..,சவுதியிலிருந்து ஒரு குரல்,போன்ற கவிதைகள் சமூகநிர்ப்பந்தத்தால்,அயல்நாடு சென்று அனுபவிக்கும் துன்ப,துயரங்களையும்,உறவின் பிரிவுகளினால் ஏற்படும் மனக் கிலேசங்களையும் துயரமொழியில் சொல்லிப் போகின்றன.அந்தக் கவிதைகள் உணர்த்தும் உணர்வுகள் நம்மனதையும் கட்டிப்போடுகின்றன.
அதிலும் அந்நியதேசத்து அடிமைகள் எனும் கவிதை,ஆண்ட ஆங்கிலேயனை விரட்டிவிட்டு,விரும்பிவந்து அடிமைப்பட்டோம் அந்நியனிடம்..என்று அவர் சொல்லும்போது,நமக்குள் ஒரு மீள்பார்வை ஓடுகிறது.சுதந்திரம் வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து போராடியது இதற்காகவா..? எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

குறிப்பாக, காலமாடும் கண்ணாமூச்சியில்
நான் பிறந்தபோது அப்பா சவுதியில்,
அப்பா இறந்தபோது நான் சவுதியில்..- -என்று துயரத்தை சுமந்த வரிகள்,பிழைப்பிற்காய் அந்நிய நாட்டில் வாழும் பலரது வாழ்வில் கடந்துபோன ஒரு சோகமாகவே இருக்கும் என்பதை நினைக்கும்போது நமக்கும் வருத்தம் மேலிடுகிறது.


நானும் மரணமும் எனும் கவிதை பெரும்பாலும் எல்லோரும்,படித்த ஒரு துணுக்கு அல்லது நகைச்சுவைதான்.இதுபோன்றவற்றை கவிதையாக்கும் முயற்சிகளை தோழர் கைவிடுவதே நல்லது.

இவருடைய காதல் கவிதைகள் மட்டுமின்றி மற்ற பல பொருட்களில் எழுதியிருப்பது,எல்லாமே வாசிக்க நன்றாகவே இருக்கிறது.
ஆனாலும்,சமூகம் குறித்த விமர்சனம்,தான் வாழும் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆவல்..மிளிரும் கவிதைகளே என்னை மிகவும் கவர்ந்தது.
தோழர் எழுதியிருக்கும் பூச்சரம் வரிசைக் கவிதைகளை இங்கு குறிப்பிடடுச் சொல்ல வேண்டும்.மலர மலர வாடிப்போனது பூக்காரியின்
முகம்..! என்ன அருமையான முரண்..!

“பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல்,
ஆஞ்சநேயருக்கு வடைமாலை,
அம்பலவாயிலில்
பசியோடு மனிதர்கள்..!”

ஆற்று நீரில்
நீந்திக் கரை சேர்ந்தது
இரயிலின் நிழல்..!”-- என்னவொரு அழகான காட்சி..!

முரண்களினால்,வாழ்வின் யதார்த்தத்தை,வெகு அழகாக சொல்லிவிடுகின்ற அவரது கவிதைகள்,மேலும்,பூச்சரம்..என்ற வரிசையில் நிறைய வரவேண்டும் என்பது எனது ஆவலாக இருக்கிறது.

கவிஞர் பசப்பியின் கவிதைகளை நான் பார்த்தவரை,தனது மட்டுமின்றி மற்றவர்களின் அனுபவங்களை உணர்வுகளை தனக்குள் வாங்கிக் கொள்ளும் பரந்துபட்ட பார்வை இருக்கிறது.இது ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கவேண்டிய சிறப்பான குணம்.!

தொடர்ந்து இதுபோல நிறைய எழுதுங்கள் தோழரே..! உண்மையையும், உண்மைக்கு மிக அருகாமையிலும் உள்ளவைகளே படைப்புகள் என்பது எனது கருத்து.அதனை செவ்வனே செய்தது உங்கள் கவிதைகள்.“குறிப்பிட்ட இதுதான்” என்று தேர்வு செய்யாமல், வரிசையாக இருந்தவற்றைத்தான் தேர்வு செய்து படித்தேன்.அது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வாசித்த நிறைவை அளித்தது.அந்த நிறைவே இங்கு எழுதவும் தூண்டியது.உங்களுக்கு எனது வாழ்த்துகளும்,நன்றிகளும்..!.

உங்கள் கவிதையின் மீதான எனது கருத்துகள்,உங்களின் எண்ணவோட்டத்தை திறம்பட எடுத்துக்காட்டாமலும் போயிருக்கலாம்.ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் நீங்கள் தாராளமாய் எனக்கு எழுதலாம்.அது இன்னும் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள உதவும்.வாழ்த்துக்கள்..மீண்டும் பேசுவோம் தோழரே..!

"உழைப்பதென்று உறுதிபூண்டால்
எங்கிருந்தோ நீளும் கைகளில்,
வெற்றிக்கான வழி இருக்கிறது;
மறவாதே நீ….. " - கவிஞர் பசப்பி.

அன்புடன்
பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (5-Aug-14, 4:05 pm)
பார்வை : 275

மேலே