லண்டன் பிரிட்ஜில் போக்குவரத்து விபத்து

காலையில் 'MetrO' என்ற 60 பக்க பத்திரிக்கையும், மாலையில் 'London Evening Standard'
என்ற 56 பக்க பத்திரிக்கையும் இலவசமாக ரயில் நிலையங்களின் நுழைவுக் கூடத்தில்
கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 மில்லியன் (20 லட்சம்) பிரதிகள் வெளியிடப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். திங்கட் கிழமை காலை 'MetrO' பத்திரிக்கையில்
ஒரு வருத்தமான செய்தி வெளியாகியிருந்தது.

பிரிட்டிஷ் கவுன்சிலில் பணிபுரியும் 28 வயதுள்ள க்ரிஸ் டேன்டி என்பவர் சனிக்கிழமை
(02.08.14) மாலை சைக்கிளில் 'லண்டன் பிரிட்ஜ்' பாலத்தில் வடக்கு நோக்கி சென்று
கொண்டிருந்தவர் நடுவில் இருந்த தடுப்பில் மோதி தெற்கு நோக்கி செல்லும் தடத்தில்
விழுந்ததால், அப்பாதையில் வந்து கொண்டிருந்த BMW கார் மோதி அடிபட்டார்.

நடந்து சென்று கொண்டிருந்த இருவர் உடனடியாக உதவிக்கு ஒடி வந்தனர்.
மருத்துவ உதவியாளர்களுடன் ஆம்புலன்ஸ் ஆறு நிமிடங்களில் வந்து சேர்ந்தும்
காப்பாற்ற முடியவில்லை. 'லண்டன் பிரிட்ஜ்' பாலத்தில் போக்குவரத்து சிலமணி நேரம்
நிறுத்தப்பட்டது. காரில் வந்தவர் அதிர்ச்சியில் உறைந்து போய் ஓரமாக அமர்ந்து விட்டார்.

போலீசார் கார் உரிமையாளரை உடனே கைது செய்யாமல் முறையான விசாரணை
செய்து வருகின்றனர். பொதுவாக பிரிட்டன் நகரங்களில் பெரும்பாலும் சைக்கிள்
செல்வதற்கென்று ஓரத்தில் பாதையுண்டு. 'லண்டன் பிரிட்ஜில்' சைக்கிள் பாதை
இல்லாததால் எதிர்பாராது விபத்து நடந்துள்ளது.

இதுவே நம் ஊராக இருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

அடிபட்டவருக்கு உதவ யாரும் முன் வந்திருக்க மாட்டார்கள். அதிகாரிகள்,
போலீஸ்காரர்கள், அமைச்சர்கள் கூட வேடிக்கை பார்த்த சம்பவங்களைப்
பற்றி செய்தித் தாள்களில் வாசித்ததுண்டு. ஆம்புலன்ஸும், மருத்துவ
உதவியாளர்களும் உடனடியாக வந்திருக்காது.

கட்டப் பஞ்சாயத்து செய்கிறேன் என்று ஆளாளுக்கு கார் உரிமையாளரிடம்
பணம் பறிக்கப் பார்ப்பார்கள். போலீஸும் தன பங்குக்கு கேஸ், கோர்ட் என்று
இழுத்தடிக்கும், பணமும் பிடுங்கும்.

எனக்கும் இதுபோன்று ஒரு இடர் சில வருடங்களுக்கு முன் நடந்தது.
மதுரையிலிருந்து சிவகங்கைக்கு மேலூர் வழியாக காரில் சென்று
கொண்டிருந்தேன். மேலூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நான்
காரில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டைக் குடும்பத்துடன்
கடக்க முயன்ற ஒருவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும்
பேருந்தைப் பார்த்தபடி குறுக்கே விரைந்தார்.

நிறுத்தி விட்ட எனது காரின் பக்கவாட்டில் அவர் கால் இடித்ததால்
சிறு சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே ஆட்கள் கூடிவிட்டார்கள். காயம்
பட்டவருடன் வேறு இரண்டு பேரும் காரில் ஏறிக்கொண்டு அருகில்
இருக்கும் மருத்துவ மனைக்குச் செல்லச் சொன்னார்கள். மருத்துவர்
என்ன சொன்னாலும் கேட்கவில்லை. 2000 ரூபாய் வாங்கித்தான்
செல்ல விட்டார்கள்.

என்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் மருத்துவரிடமே வாங்கிக் கொடுத்து
சமாளித்தேன். பின் சில நாட்களில் மருத்துவரிடம் வாங்கிய பணத்தை அவருக்கு
கொடுத்து அனுப்பினேன்.

இதெல்லாம் இன்றி நேர்மையான முறையில் இங்கு விசாரணை நடைபெறுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-14, 10:19 pm)
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே