ஐம்பூதங்கள் விற்பனைக்கு
நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் -- இயற்கையின் மூலங்கள் இவை. இவற்றின் மீது மனிதகுலத்திற்கு பயம் இருந்தது, இருக்கிறது. இதுகாரும் இவை தெய்வங்களாய் வணங்கப்பட்டன. எனினும் காலமாற்றத்தால் விற்பனைப் பொருளாய் மாற்றப்பட்டுவிட்டன. நில எல்லைகளைக் கொண்டு ஆட்சிச் செய்த காலம். நிலத்தின் மீது உரிமைக் கொண்டாடி போர்கள் நடந்தன. நிலத்தின் மீது இவர்களுக்கு யார் உரிமை அளித்தார்கள்? காலம்மாறி போர்கள் நின்று நிலங்கள் சொத்தாக வாங்கப்படுகின்றன். யாருக்கும் உரிமையில்லாத நிலங்களின் மேல் உரிமைகள் விற்கப்படுகின்றன. இதில் நில மோசடிகள் வேறு. நிலத்தை விற்பதே ஒரு பெரும் மோசடி.
நீர் -- தாகத்தின் தீர்வு. உயிரின்றி உலகமையாது.. நீரின்றி உயிரமையாது. உலகில் மூன்றில் இரு பகுதி நீரிருந்தாலும் குடிநீரின் தேவை குறைந்ததாய் தெரியவில்லை. தேவை அதிகரிக்கும்போதே எதுவும் விற்கப்படுகிறது. சில நேரம் நான் வியப்பதுண்டு! அது எப்படி ஆறுகளில்கூட நீர் வறண்டுபோகிறது, ஆனால் குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நீர் வறண்டு போவதே இல்லை. ஒருவேளை ஆறுகளில் நீர் வறண்டுபோக இதுவே காரணமாகுமோ! உலகத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் நீர் கொள்வதற்கு சம உரிமையுண்டு. அதனை கொள்கலனில் அடைத்து விற்பதற்கு எவருக்கும் உரிமையில்லை!
காற்று -- சுவாசமில்லாமல் பொதுவாக ஒரு மனிதனால் மூன்று நிமிடத்திற்கு மேல் உயிர்வாழ முடியாது. உயிரோட்டத்தின் அடையாளம் சுவாசம். பருவக்காற்று மழைக் கொண்டு வரும். ஆடிகாற்று தள்ளுபடி கொண்டு வரும். கண்ணில் தெரியாத ஒரு பூதம் காற்று. இது மட்டும் கண்ணில் தெரிந்தால் உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. சுவாசத்திற்கு உருளைகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து உயிருக்கு போராடுபவர்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறது!
நெருப்பு -- வெப்பத்தின் தாய். கதிரவனின் கதிர்வீச்சு. உலகத்தை பனியில் உறையவைக்காமல் காக்கிறது இந்த வெப்பம். எதனையும் விரைந்தழிப்பதில் வல்லது. நவீன கால போர்களின் பயமுறுத்தும் சக்தியாய் மாறியுள்ள அணுகுண்டுகள். நெருப்பையும் அதன் அழிவையும் உண்டாக்கும் போர் ஆயுதங்களையும் எத்தனை நாடுகள் விற்பனை பொருளாக்கியுள்ளன.
ஆகாயம் -- கண்களில் காணப்படும் எல்லை அறியமுடியாத ஒரு வெற்றுவெளி. கையில் பிடிக்கமுடியாத ஒரு இடைவெளி. பூமிக்கு மட்டுமில்லாமல் பல கிரகங்களுக்கு அது கூரை. அதையும் விட்டுவைக்கவில்லை இந்த மனிதகுலம். செயற்கைகோள்களை அனுப்பி அங்கேயும் எல்லைப் பிரித்துக்கொண்டான். அலைகளின் பிரிவால் தொலைத்தொடர்பு சாதனம் என்ற பெயரில் அதுவும் விற்பனைச் சந்தையாகிப்போனது!
மொத்தத்தில் இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? எப்படி இந்த உலகத்தை பல கடவுள்கள் படைத்திருக்கமுடியாதோ அதேபோல் எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது தனிக் குழுவுக்கோ இந்த உலகம் சொந்தமாகிவிடாது. ஐம்பூதங்கள் உலகில் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. அதைப் பகிர்ந்துகொள்வோம் விற்பனை செய்யாமல்...!