கல்லணைக்கோர் பயணம்37
கல்லணைக்கோர் பயணம்..37
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
ஒருபக்கம் குளியலும்
விளையாட்டும் களைகட்ட
மறுபக்கம் சாகச சிறுவர்கள்
தண்ணீர் பாம்பின் வாலை
லாவகமாய் பிடித்து
தலைக்குமேல் வேகமாய்
தொடர்ச்சியாய் சுழற்றி
வாய்க்காலில் வீச
பயங்கொண்ட சிறுவர்கள்
பயத்தில் நடுங்கினர்
மறுபக்கம் மீன்பிடிக்கும்
நண்பர்கள் தூண்டிலின்
கொக்கியில் மண்புழுவை
மெல்ல கோர்த்து
நீரினில் விட
ஏமார்ந்த மீன்கள்
எளிதில் கிடைக்கும்
உணவிற்கு போட்டியிட
வென்ற மீன்
கொக்கியில் சிக்க
குஷியில் துள்ளினர்
கும்மாளமாய் சிறுவர்கள்
இன்னும் சிலர்
உடுத்திய ஆடைகளை
ஆயுதமாய் ஆக்கி
ஆளுக்கோர் மூலையை
அழகாய் பிடித்து
நீந்தும் மீனை
நேரம் பார்த்து
ஆடையில் பிடித்தனர்
அழகிய குழுமுயற்சியுடன்
வெற்றி துள்ளல்கள்
ஒருபுறம் மிளிர
மறுபக்கம் கவனிப்பாரின்றி
பதறி துடித்தன
பிடிபட்ட மீன்கள்,
மூடிய பாத்திரத்தின்
நீர் சிறையில்
இருள் அறையில்
நீந்தி பார்த்தன
அழுது தோற்றன
எவர் காதுகளுக்கும்
எட்டவில்லை மீன்களின்
அழுகுரல்..