கல்லணைக்கோர் பயணம்38
கல்லணைக்கோர் பயணம்..38
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
பாலத்தை விட்டுநகர
மனம் வரவில்லை
இனிய தருணங்களால்,
குளித்து முடித்த
சிறுவர்கள் மறுபடியும்
முதலில் இருந்து
துவங்க விரைந்தனர்
பம்புசெட்டை நோக்கி,
செல்லும் வழியெங்கும்
வரப்புகள் பச்சைக்கம்பளம்
விரித்து வரவேற்றது
வருங்கால முதலாளிகளை
வாஞ்சையுடன்..
பசுமை போர்த்திய
நிலங்கள் பார்ப்பதற்கு
இறையில்லமாய் காட்சியளிக்க,
சீரான பயிர்கள்
காற்றின் அசைவினை
துல்லியமாய் மொழிபெயர்த்தன,
அவற்றின் அசைவில்
வெப்பக் காற்றும்
உருமாறியது உடனே
மேனிவருடும் மென்தென்றலாய்
கழுத்தளவு நீரில்
நடனமாடிய படியே
சாதகம் செய்தன
நன்செய் நாற்றுகள்
ஆயில் மோட்டார்
சாவியின் சுழற்றலில்
உயிர் பெற்றது
மெல்ல மெல்ல,
கம்பீர குரலால்
அமைதி பூமியை
மிரட்டி பார்க்க
அனைவரும் பாய்ந்தனர்
கிராமத்து அருவியில்
குளித்து மகிழ
விடுமுறை நாட்களை
நண்பர்களின் கூட்டத்தோடு
எண்ணிய வழிகளில்
இன்பமாய் களித்தனர்
பிரிய மனமின்றி
மெல்ல நகர்ந்தோம்
பாலத்தை விட்டு
பசுமையான நினைவுகளோடு..
(பயணிப்போம்...38)