கல்லணைக்கோர் பயணம்36

கல்லணைக்கோர் பயணம்..36
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

பாலத்தில் அமர்ந்து
பாதங்களை குளிர்விக்க,
சுவையூட்டும் அனுபவங்கள்
நிகழ்ந்தன எங்களைச்சுற்றி,
வெயிலின் தாக்கத்தை
தணிக்க நினைத்த
சிறுவர்கள் பலர்
பாலத்தில் இருந்து
பல்டி அடித்து
நீரின் ஆழத்தை
அளந்து பார்த்தனர்
ஒன்றன்பின் ஒருவராய்,
வெகுண்ட நீர்த்துளிகள்
வேகமாய் அறைந்தன
வேடிக்கை பார்பவர்களை..

மேலும்சிலர் ஈரமணலை
உடம்பில் தேய்த்து
அழுக்கை விரட்டினர்
விலையில்லாத குளியலில்,
பணமுள்ள சிலர்
உடம்பு முழுக்க
இடைவெளி இன்றி
நுரைபடர குளித்து
வழுக்கும் சோப்பை
தண்ணீரில் தவறவிட்டு
நுரைபடர்ந்த கண்களோடு
தேடிப்பிடித்து அழுக்கு
தேய்க்கையில் ஒட்டிய
மணல் துகள்கள்
உடலை உரசின
வழுவழுபின்றி..

பாலத்தின் ஒருபுறம்
குதித்து மறுபுறம்
நீரின் வேகத்தோடு
பாய்ந்து வருவதும்,
நான்கைந்து நண்பர்கள்
ஒவ்வொருவராய் தூக்கி
உயரேவீச மகிழ்ச்சி
பேரொலியோடு நீரில்
பாய்வதுமாய் உற்சாகம்
களைகட்டியது..

அணிசேர்ந்த குட்டிவீரர்கள்
ஒளிந்து விளையாடினர்
நீருக்குள் நீச்சலுடன்
மிகப்பெரும் விளையாட்டு
திடலாய் மாறிப்போனது
வாய்க்கால் பகுதியின்
பாலக்கட்டை பரபரப்பாய்,
கண்கள் சிவக்கசிவக்க
மூக்கில் நீரேறினாலும்
முழுமூச்சாய் குளிப்பதும்
சாகசங்களை தொடர்வதுமாய்
தொடர்ந்தன அவர்களின்
குளியல் ஆனந்தமாய்..

(பயணிப்போம்...36)

எழுதியவர் : ஆரோக்யா (9-Aug-14, 3:30 am)
பார்வை : 84

மேலே