மனம் மீண்டும் கேட்கிறது

மனம் மீண்டும் கேட்கிறது,
அந்த இரண்டாம் ஆண்டு ஆய்வுக்கூட நாட்களை!
அருகருகே அமர்ந்தும்,
நாம் இருவர் மட்டுமே இருந்தும்,
வார்த்தைகள் தடுமாறும் எனக்கு!
தெளிவாய் நீ பேசிட,
நட்புக்கும், காதலுக்கும் இடையில்
நான் சிக்காமல் எப்படி இருப்பேன்?
நமக்கு இடையிலிருந்த நாற்காலி
ஒருநாள் காணாமல் போனதே!
நீ அறிவாயா?
உனக்குள் நான் காணாமல் போன பொழுதே,
நாற்காலியும் காணாமல் போனது!

நான் ஏரணம் சொல்ல,
நீ நிரலாக்கம் செய்திட,
மீதம் இரண்டு மணிநேரம் கடலை வருப்போம்!

மறந்தேபோயிருப்பேன் என் எழுதுகோலை,
அதுவும் தேர்வு நாட்களில்,
எனக்காய் ஏற்கனவே வைத்திருப்பாய் ஒரு எழுதுகோலை,
என்னோடு பேசாமலிருந்த கடைசி ஆண்டுகளிலும் கூட!

அவை அத்தனையும் என்னிடம் பத்திரமாய் இல்லை,
நினவுகள் மட்டும் பத்திரமாய்!

என் நினைவில் இல்லாத உன் எண்கள்,
என் விரல்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறதோ?

உன் மின்னஞ்சல் அடைவை நிரப்பிட வேண்டிய
அஞ்சல் அத்தனையும் இன்னும் என் வரைவு அடைவைகளில்!

அனைத்தையும் மறக்கவே நினைக்கிறேன்!
மறக்க நினைத்து, நினைத்து
உன்னையே நினைக்கிறேன்!

காதல் வேண்டாம் என்றதில் வருத்தம் தான்,
பெற்றோரின் பிள்ளையாய் நீ இருப்பதில் மகிழ்ச்சிதான்!

'பெண்ணே! மீண்டும் ஒரு முறை பிறப்போமா?' - மனம் மீண்டும் கேட்கிறது!

எழுதியவர் : நிரலன் 'மதியழகன்' (9-Aug-14, 12:52 pm)
பார்வை : 152

மேலே