நடைப்பழகும் சூரியன்-7
சுருங்காப் பகலே சுடரும் எழுத்தே
மருளா நடைப்பழகு நீ
ஒளிரும் தமிழே துளிர்க்கும் தளிரே
குளிர் வீசி நடைப்பழகு
களிறின் நடையே கன்னல் சுவையே
பிளிரும் மழலையெழுப்பி நட
மாற்றம் மண்ணில் முகிழ்ந்து -மானுட
ஏற்றத்தாழ்வுகள் நீக்க நட
குயிலோசைக் குரலெழுப்பி பல் வண்ண
மயிலழகு நடைப்பழகு நீ
தேரெல்லாம் தோற்குமுன் நடையழகில் என
ஊரெல்லாம் உரைக்க நட
கரமதில் பசும்விதை ஏந்தி நட
உரமது உயிர்க்கு உணர்
பாத்திகளில் தமிழ்ப்பயிர் வளர்த்திட நீ
ஆத்திச்சூடி படித்து நட
இசையெழுப்பி நீ நடக்கின்றாய் ஆதலால்
அசையா பொருட்களுக்கு இன்பம்