செம்மொழி யாவினும் செம்மொழி

செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
...................செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
....................ஏறுது வானடியோ!


இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
.....................மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
....................செம்மொழி ஈதடியோ!


எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
...................எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
..................இம்மொழி விண்மொழியோ?


எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
.................இம்மொழி யாமடியோ?
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
.................எந்தமிழ் மேலடியோ?


செம்மையும் தூய்மையும் சீர்குறை யாமலே
..................செய்குவம் தொண்டடியோ!
மும்மையும் செந்தமிழ் மூவா மொழியென
..................முந்துற வாழியரோ!



((((வல்லின மெய் இல்லாத பாட்டு)))

........................................................................
எழுதியவர்; மறைந்த இறையருட் கவிஞர் தமிழறிஞர்
உயர் திரு செ.சீனி நெய்னா முகம்மது.அவர்கள்.
"'உங்கள் குரல்"" திங்களிதழ் ஆசிரியர் , மலேசியா

அவர்களின் நினைவாக மீண்டும் இக்கவிதையை பதிகிறேன் .
.......................................................................
வண்மொழி=வளம்
மண்மிசை=இது போல் தனித்தன்மை
எந்நெடுங்காலமும்=நிலைத்தன்மை
இன்மொழி=இனிமையான மொழி
மும்மையும் மூவா மொழி= இளமை
தொன்மொழி=பழமை
எம்முறை தேரினும்=முழுமை
தாயடியோ=மூலத்தன்மை
விண்மொழி=மேன்மை
முந்துற=முதன்மை
............................................................
நன்றி::: உங்கள் குரல் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்.

எழுதியவர் : சீனி நைனா முகமது (11-Aug-14, 7:28 am)
பார்வை : 519

மேலே