தப்பி ஓடும் கற்பனை

பயணிக்கும் போதுதான்
கற்பனை தாலாட்டும்
பெருந்துப் பயணத்தில்
பாதுகாப்பு உறுதி
(சில சமயம் விபத்தும்
விரும்பிவர வாய்ப்புண்டு)
என்றாலுமோர் பயணியாய்
எழுதிட முடியாது
அருகமர்ந்து இருப்போர்
வேடிக்கை பார்ப்பாரே.
நாள்தோறும் எனக்குதவும்
இருசக்கர வண்டியில்
தென்றல்வீசும் வேளையில்
பயணிக்கும் போது
கற்பனைத் தாலாட்டில்
கண்மூடத் தவிக்கும்
மூளையின் எச்சரிக்கை
விபத்தினைத் தடுக்கும்.
சிந்தனையை முடமாக்கிப்
பயணிக்க முடியவில்லை
வண்டியை நிறுத்திவிட்டு
எழுதிடவும் மனமில்லை
வழிப்போக்கர் எனைப்பார்த்து
கிறுக்கனென்று நினைத்தால்
வீடுவந்து சேர்வதற்குள்
உதித்தகரு சிதைந்துவிடும்
ஞாபக மறதியின்
சாபக் கேடிதுவோ?
மறந்தது மறந்ததுதான்
மறுபடியும் வருவதில்லை
வீட்டுக்கு வந்தபின்னே
வெளிறிவிடும் கற்பனை
சென்றவிடம் தெரியாமல்
மனதுக்குள் மறைந்திருக்கும்
இன்னொரு நாள் வருமன்றோ
அப்போது பார்க்கிறேன்
தவிர்த்திடுமா என்பிடியை?