போக்குவரத்து விதி மீறல் தமிழகத்திலும், பிரிட்டனிலும் ஓர் ஒப்பீடு - 1

சூழல் 4:

அடுத்த நாள் 30.07.14 காலை. 9 மணிக்குக் கிளம்பி என் மகன் அருகிலுள்ள
ரயில் நிலையம் சென்று அலுவலகமும் சென்று விட்டார். மதியம் ஹௌன்ஸ்லோ
குழுமத்தின் பார்க்கிங் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து தபாலில் ஒரு கடிதம் வந்தது.
அதில் என் மகனின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருந்தது. வேண்டுகோள் என்ன?
சற்று பின்னோக்கிச் செல்லவேண்டும்.

சூழல் 5:

03.07.14 காலை 8.55 மணிக்கு என் மகன் தன் இரண்டு மகள்களையும்
பள்ளியில் கொண்டு விடுகிறார். பள்ளியின் முன்பு வரையறைப்படுத்தப்பட்ட
பகுதியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் சிலநொடிகள் நிறுத்தி, குழந்தைகள்
இறங்கியதும் கிளம்பி விடுகிறார். அவர் காரை விட்டு இறங்கவில்லை.
அங்கிருந்து கிளம்பும்போது ரோட்டின் எதிர்ப் புறத்தில் பார்க்கிங் சர்வீஸ்
குழுமத்தின் வேன் நின்று கொண்டிருப்பதையும், அதிலிருந்து வீடியோ
எடுப்பதையும் கவனிக்கிறார்.

சூழல் 6:

09.07.14 தேதியிட்ட அறிக்கை ஒன்று 10 ஆம் தேதி பார்க்கிங் சர்வீஸ்
குழுமத்திடமிருந்து வருகிறது. அதில் வரையறைப்படுத்தப்பட்ட பகுதியில்
தடை செய்யப்பட்ட நேரத்தில் உங்கள் காரை நிறுத்தியதற்காக அபராதம்
110 பவுண்டுகள் என்றும், 21 நாட்களுக்குள் அபராதம் கட்டுவதாயிருந்தால்
சலுகையாக 55 பவுண்டுகள் கட்டினால் போதுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு, என் மகன் சில நொடிகளே குழந்தையை இறக்கிவிட நிறுத்தினேன்,
முதல் முறையாக இத்தவறைச் செய்ததால், மன்னித்து எச்சரித்து அபராதத்
திலிருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டிருந்தார்.

அதற்கு Business Processing Manager, Parking Services நீங்கள் நிறுத்தியது
எவ்வளவு சில நொடிகளே ஆனாலும், பள்ளிக்கு எதிரே குழந்தைகளின்
பார்வையை மறைக்கும்படி மஞ்சள் குறுக்குக் கோடிட்ட தடை செய்யப்பட்ட
இடத்தில் நிறுத்தியது குற்றமே! இதில் உங்களுக்கு விலக்களிக்க இயலாது.

எனவே இதிலிருந்து 21 நாட்களுக்குள் அபராதம் கட்டினால் 55 பவுண்டுகள்
என்றும், தவறினால் மேலும் 7 நாட்களுக்குள் அபராதம் 110 பவுண்டுகள்
என்றும் தெரிவித்திருந்தார். இன்னும் நீங்கள் செய்ததுதான் சரியென்றால்,
Parking Adjudicator க்கு முறையிடலாம். உங்கள் தவறு நிரூபிக்கப்பட்டால்
விளைவுகளைக் கோர்ட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இருந்தது.

எனவே மறு பேச்சின்றி உடனே தன் Debit card மூலமாக 55 பவுண்டுகள் அபராதத்
தொகையைக் கட்டி விட்டார்.

இத்தகைய உறுதியான தீவிர நடவடிக்கை எடுத்தால் நம் ஊரிலும் தவறுகளைச்
செய்வார்களா?

சிபாரிசு, கையூட்டு, வழக்குப் பதிவு, வாதம், பிரதிவாதம், வக்கீல், கோர்ட்
இத்தனை சம்பிரதாயங்களும் நம் மக்களைத் தவறுகளைத் தெரிந்தே
துணிந்து செய்யத் தூண்டுகின்றன அல்லவா?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-14, 12:21 am)
பார்வை : 201

மேலே