ராகங்களில் மோகனம்

தமிழ் திரை இசையில் அதிகம் பயன் பட்ட ராகங்களில் மோகன ராகம் முதன்மையான ஒன்று.இந்த ராகத்தைப் பயன்படுத்தாத திரை இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிகம் பயன் படுத்தப்பட்ட அழகான ராகம் மோகனம்


மோகனம் , ஹிந்தோளம் , சிவரஞ்சனி ,சுத்தசாவேரி போன்ற ராகங்கள் 5 சுரங்களைக் கொண்ட ராகங்களாகும்.பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள்இனிமைமிக்க ராகங்கள் ஆகும்.இன்று இந்தியா எங்கிலும் ஒலிக்கின்ற ராகமாகவும் உள்ளது.
அதுமட்டுமல்ல மோகன ராகம்.ஐரோப்பா , ஆபிரிக்கா , அரேபியா போன்ற நாடுகளிலும் ஒலிக்கின்ற ராகம்.
ஐரோப்பிய இசையால் உந்துதல் பெற்ற ரவீந்தரநாத் தாகூர் மோகனத்தின் சாயலைக் கொண்ட ஸ்கொட்லாண்ட் நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடலை [ Auld Lang Syne ] தனது இசை நாடகத்தில் பயன்படுத்தியுள்ளார்.அதனை அவர் Scotland pupaali என்று அழைத்தார்.முக்கியமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளான சீனா , ஜப்பான் ,கொரியா ,தைவான் ,வியட்னாம் , கம்போடியா , தாய்லாந்து , பிலிப்பைன்ஸ் , நேபாளம் , பூட்டான் , பர்மா போன்ற நாடுகளில் மிகவும் சர்வ சாதாரணாக கேட்டக்கூடிய ராகமாகும்.தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மோகனம் தான் ஒலிக்கும் என்று கூறக்கூடியளவுக்கு இந்த மோகனம் பயன் பாட்டில் உள்ளது எனலாம்.இந்த நாடுகளின் தேசிய ராகம் என்று சொல்லுமளவுக்கு மோகனம் ஆதிக்கம் செலுத்துகிறது.
மேற்க்குறிப்பிட்ட நாடுகளின் நாட்டுப்புற இசைவடிவங்களில் , பாடல்களில் இந்த ராகத்தின் சாயல் தூக்கலாத் தெரியும்.ராகம் என்ற அமைப்பில் அவர்கள் பயன்படுத்தாவிட்டாலும் மெட்டுக்கள் இந்த ராகத்துள் அவை அடங்கும் எனலாம்.
ஆபிரிக்காவில் சூடான் நாட்டின் நாட்டுப்புற இசையில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள ராகங்களில் இதுவும் ஒன்று.

ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா போதி தர்மராக சீனாவிற்குச் சென்று, அங்கு நோய் வந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றி, அக்குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்கும் காட்சியின் பின்புலத்தில் ஒரு சீனப் பாடல் ஒலிக்கும், அதும் மோகன ராகத்தில் அமைந்த பாடலே.

மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று. பல் வேறு காலங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ராகம் பற்றிய ஆதிக் குறிப்பை தருவது சிலப்பதிகாரமே.ஆச்சியர் குரவை என்ற பகுதியில், கூத்துள் படுதல் [ ஆடத் தொடங்குதல் ] 17 வது பாடலில்
” அவர் தம்
செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோ ஒத்து
அந்நிலையே ஆடல்சீர் ஆய்ந்துளார் – முன்னைக்
குரல்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருத்து ஒசித்தான் பாடுதும்
முல்லைத் தீம்பாணி என்றாள் “
வட்டமாக நின்று ஆயர் மகளிர் கூத்து ஆடும் பொழுது ” பாடுதும் முல்லைத் தீம்பாணி என்றாள் ” என இளங்கோபாடுகின்றார்.
இசை அறிஞர் எஸ்.ராமநாதன் மோகன ராகம் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.அவரின் ஆய்வுகள் முல்லைத் தீம்பாணி தான் இன்றைய மோகனம் என நிறுவியுள்ளன.

வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பது போல தமிழ் சினிமாவில் மோகன ராகத்தால் பாடல்கள் நிறைக்கப்பட்டுள்ளன.மெல்லிதான திரையை விலக்கினால் மின்னி ஜொலிக்கின்ற வைரங்கள் போல ஏராளம் பாடல்கள் விரவிக் கிடக்கின்றன.

கிரி தர கோபால – படம் :மீரா 1945 – பாடியவர் :எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை:எஸ்.வீ .வெங்கட் ராமன்
1940களில் வெளிவந்த மிகப் பிரபல்யமான பாடல்.

காற்று வெளியிடை கண்ணாம்மா – படம் :கப்பலோட்டிய தமிழன் 1960 – பாடியவர்கள் :பி.பி.ஸ்ரீநிவாஸ் பி.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்

இதயம் ஒரு கோயில் – படம் :இதயகோயில் – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா

நிலவு தூங்கும் நேரம் – படம் :குங்குமச் சிமிழ் – பாடியவர்கள் :எஸ்.பி.பி ,எஸ்.ஜானகி இசை:இளையராஜா
பூவில் வண்டு கூடும் – படம் :காதல் ஓவியம் – பாடியவர் :எஸ்.பி.பி – இசை:இளையராஜா.

பக்திப்பாடல்கள் சில:
திரு முருகா ஒரு முறை வா திருவடி சரணம் கந்தா – சீர்காழி
தங்கத்தாமரைத் தொட்டிலிலே – சூலமங்கல சகோதரிகள்
மாணிக்க வீணை ஏந்தும் – பி.சுசீலா
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் – ராதா மாணிக்கம்

உலக இசையில் மோகனத்தை கேட்டுப்பாருங்கள்.Youtube இல் இந்தப்பாடல்கள் கிடைக்கின்றன.

01 auld lang syne – lea michele
02 Traditional Thai Music
03 Sukiyaki—Kyu Sakamoto
04 Kong Ling – Sukiyaki 196x
05 tai orathai thailand
06 Sukyaki – Yasmin Lucas
07 Blue Diamonds – Sukiyaki 1963
08 Sukiyaki (Live) – English Version
09 Sukiyaki and Edelweiss

எழுதியவர் : (12-Aug-14, 10:07 pm)
பார்வை : 592

மேலே