மனித மன்னாரே இறைவன் வண்ணாரே

வந்தாராம் வந்தாராம் வண்ணாரூ
வண்டாட்டம் சுற்றிச் சுற்றி நின்னாரு
வாழ்க்கையில் பலர் வெளுப்பாய் தோன்றிடவே
தன் மேனி கருக்க துணியை வெளுத்துதான் தந்தாரு

நாலுமுழ கோவணமாம்
நட்டாற்றில் முங்கி தான் எழுந்தாறு
கரையோரம் வர்ண தோரணமாம்
கஞ்சிக்கு வழியின்றி தவிச்சாராம்

ஊரெங்கும் சாமி ஊர்வலமாம்
தெருவெங்கும் காணினும் தோரணமாம்
வெளுத்த துணிக்கு வெள்ளாவியாம்
வேட்டிக்கு வழியின்றி வெம்பினாராம்

ஊருக்கு ஒரே சாமியென்றால்
இவனுக்கு ஊரெல்லாம் சாமியாம்
மாமியும் சரி ராமசாமியும் சரி
எல்லாரையும் வணங்கும் சாமியிவனாம்

விரும்பினாலும் சரி வெம்பினாலும்சரி
வேறு போக்கத்து வணங்கி வாழ்ந்தாராம்
வேலைக்கு கூலியாய் பழைய கூழினை தந்தாராம்
முன்வாசல் கிடையாது பின்வாசல் முறைவாசல் ஆனதாம்

வேட்டியழுக்கை வெளுக்கையில்
கை வலிக்கவில்லை கைகூப்பி நிற்கையில் வலித்ததம்மா
கறைபடிந்த மனிதனெல்லாம் கரைக்காரராம்
கரை போக்கும் வண்ணாருக்கு கரைபடிந்தவன்னு
திண்ணையிருந்தும் தரைதான் மேடையாம்

அழுக்கு துணியில் இல்லையடா
அழகு முகத்திலும் இல்லையடா
அழுகை சிந்தி தினம் துவைக்கும்
அழகன் முகத்தை தினம் கரிக்கும்
மனிதன் மனதில் உள்ளதடா...!!

வெளியழுக்கை களைய நானிருக்கேன்
வீதி உலா வரும் தெய்வமே
அகத்தின் அழுக்கை வெளுக்கட்டும்
அகந்தையெல்லாம் அழியட்டும்
யாவரும் மனிதனென்று நினைக்கட்டும்

எழுதியவர் : கனகரத்தினம் (13-Aug-14, 2:42 am)
பார்வை : 66

மேலே