இனவெறிப் பேய்

குழந்தைகள் கடவுளுக்கு
சமம் எனும் போது
சிசுக்கறி திண்ணும்
இனவெறிப் பேய்களை
எந்த செருப்பினால்
அடிக்க ?

பள்ளிக்கு சென்ற
பிள்ளைகளை
பாடையில் ஏற்றிய
மலம் தின்னும்
பன்றியிலும் கேவலமான
இவர்களின் தீவிரவாதத்தை
எந்த கடவுள் தடுப்பான் ?

புத்தகம் சுமந்த
பட்டாம்பூச்சிகளை
குருதியல் குளிக்க
வைத்து
அவர்களின் குருத்தெலும்பை
உடைத்தெறிந்த
பாசமற்ற தீவிரவாதத்தின்
காதுகளில்
பிஞ்சுகளின் பெரும் ஓலம்
கேட்கவில்லையா ?

பறவைகள்
அலகு கோரக்கூட
கூர் மூக்குக் கனரகங்கள் !

கண்ணிவெடிகள்
காத்துக் கிடக்கின்றன
பாதம் பதிக்கும்
கால்களில் வெடிக்க !

ஒன்றுமறியா குழந்தைகளை
உயிரோடு கொளுத்தி
உடலெங்கும் எரிய விட்ட
குற்ற உணர்வின்
பிரக்ஞை ஏதுமின்றி -
எதையும் புன்சிரிப்புடன்
பேசும்
உங்களது நாகரீகம்
குறித்து
சொல்வதற்கு ஒன்றுமில்லை !

நனி சிறந்த
உங்களின் நாகரீகம்
இறக்கம் , அமைதி
சமாதானமென்ற
பண்பாட்டாடைகளை
களைந்து
இனவெறி அம்மணத்துடன்
திரிய -
" நாய் மூத்திரம்
பெய்யப் பயன்பட்ட
நடுக்காட்டுச் சிவலிங்கமாகிப்
போன
சர்வதேச வல்லரசுக்
கழுகுகளோ "
இழவு வீட்டில்
வாய்க்கரிசி திருடும்
குயுக்தியோடு
பாரபட்ச விஷ விதைகளை
உலக வீதிகளின்
சாக்காடுகளில்
விதைத்துத் திரிகின்றன !

அவர்கள் விதைக்கும்
விஷ விதைகளின்
அக்னிப் பயிரில் '
தமது குலக்கொளுந்துகளே
கருகிப் போகப் போவதறியாது
கெக்கலிக்கும் கோழைகளின்
வீரம் கேலிக்குரியது !

பச்சிளம் மொட்டுகளிடம்
பொம்மைகளைப்
பறித்து விட்டு
சாவினைப் பரிசளிக்கும்
பேடிகளின் ஜனநாயகத்தில்
நீதி தேவதையின்
கண்கள்
'' தீவிர வாதத் துணியால்''
கட்டப் பட்டிருக்குமிது
பேய்களின் தருணம் .

எழுதியவர் : பாலா (15-Aug-14, 1:12 pm)
பார்வை : 115

மேலே