இழிவுகள் ஒழிவதென்று

முடியரசொழிந்து
குடியரசாச்சு.
ஓடிய வருடம்
அறுபத்துநாலாச்சு.

புல்லோர் கையில்
போனது தேசம்.
நல்லோர் அருகிடில்
ஆகிடும் நாசம்.

சுயநலம் பெருகிட
சுருங்குது மனிதம்.
பொய் புரட்டாள
பொழுதுக்கும் அசிங்கம்.

ஊழலும் லஞ்சமும்
உருட்டும் புரட்டும்
பல்கிப் பெருகுது
பதறுது நெஞ்சம்.

இச்சை பெருகுது
ஒழுக்கம் குறுகுது.
நாடெங்கும் வளருது
நச்சியல்புகளே.

ஓட்டை விற்க
கூசலை மனமே
இலவசம் வேண்டி
இழியுது தினமே.

கடமையைத் துறக்க
கலங்கலை எவரும்
கடனேயென்று
கருதுவர் வேலை.

வெற்றுப் பேச்சும்
வீண் சச்சரவும்
பொய் வாக்குறுதியும்
புகழ்ச்சியும் இகழ்வும்

அன்றாடஞ் செய்கிறார்
அரசியலாரும்.
வரிப்பணம் கரியாய்
ஆக்குது அவர்செயல்.

உண்பொருள் உறைவிடம்
உடைகளுமின்றி
உழலுவோர் துயரம்
உரைத்தல் கடினம்.

மக்கள்தொகையில்
முக்கால் வீதம்
இவ்விதம் வாழ்தல்
எவ்விதஞ் சரியோ?

பொறுப்பினிலுள்ளோர்
பொறுப்பின்றி நடக்க
கூட்டுக்கொள்ளை
கூடவே நடக்குது.

நற்கல்வி மருத்துவம்
கைவிட்டு அரசும்
நஞ்சு விற்பதில்
நாட்டங் காட்டுது.

புகைபொருள் வரியால்
வரும் நிதி சொற்பம்.
மருத்துவ நிதியோ
பல மடங்கதிகம்.

பெருந்திரை குறுந்திரை
ஊடகம் யாவும்
உருப்படியில்லா
உறுபொருள் தருது.

பார்த்தும் படித்தும்
பெறுநன்மை கொஞ்சம்.
முற்றாய்த் துறக்க
மனநலம் மிஞ்சும்.

இறையின் பெயரால்
இழிசெயல் பெருகுது.
மதச்சண்டை வளர
மரக்குது மனிதம்.

தீதென்றறிந்தும்
விலக்கிட விழையார்
இருக்கும்வரைக்கும்
இருக்குந் தீமையும்.

தெரிந்தே தவறு
செய்திடும்வரைக்கும்
தீர்வெதுமில்லை
தீர்ப்பெதும் வீணே.

இத்தனையிழிவும்
ஒழியும் ஒருநாள்.
விரைவில் நிகழ
விழைகிறேன் நாளும்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (17-Aug-14, 2:14 pm)
பார்வை : 79

மேலே