மழைக் கலைஞன்

பரபரப்புக்கு மட்டுமே
பஞ்சமே வராத
அந்தப் பெருநகரத்துச்
சாலையில்
வான் பூக்களென
பெய்து கொண்டிருந்தது
மழை !

சாலையோரத்தில்
அவன்
சுருண்டு கிடந்தான்
தன்
ஒற்றைக் கையை
மழையில்
ஏந்தியபடி !

ஒரு
நவீன மழை ஓவியம்
போன்றுதான்
அந்தக்காட்சி
முதலில்
மண்டைக்குள் பதிந்தது !

கொஞ்சமிருந்த
சில்லறைகளில்
துன்பச்சங்கீதம்
இசைத்துக் கொண்டிருந்த
அந்த
ஒற்றைக் கையும்
மழைக்குளிரில்
நடுங்கிக்கொண்டிருந்த
' என்புதோல் போர்த்த '
அந்த உடம்பும்
அவனொரு
ரத்தமும் சதையுமான
இல்லை ............
ரத்தமும் எலும்புமான
உயிர் என்பதை
புத்தியில் அறைந்தன !

பரிதாபப்பார்வையும்
மிரட்சி நடையுமாகப்
பெண்கள் அவனைக்
கடந்து போயினர் !

குடைபிடித்து
வந்த ஒருவன்
அந்த
ஒற்றைக் கைக்கு
காசு போட்டுப்போனான்
ஏற்கனவே
அந்தக் கை
இசைத்துக் கொண்டிருந்த
துன்ப சங்கீதத்திற்கு
மேலும்
சுருதி சேர்ப்பது போல !

மழைக் கலைஞன்
போலக் கிடந்த
அவனை
திகைப்போடு பார்த்து
குரைத்துவிட்டு ஓடியது
தெருநாய் !

மனசாட்சியை
சமாதானப்படுத்துவதற்காகவே
அவனைத்
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடி சென்றனர்
ஒரு சிலர் !

அதற்கு
அவசியமே இல்லாமல்
அலுத்துக்கொண்டு சென்றனர்
ஒரு சிலர் !

ஓடிப்போய்
அவனையெழுப்பி
பரிதாபம் கறப்பதற்காக
அவன் செய்யும்
விபரீத யுத்திக்கு
சும்மாவேனும்
நாலு திட்டுத்திட்டி
" இனி இப்படிச் செய்யாதே "
என அறிவுறுத்தி
மழைக்கு இதமாய்
அவனுக்கொரு தேநீர்
வாங்கிக்கொடுக்க................

தோன்றத்தான்
தோன்றினாலும்
எல்லாரையும் போலவே
அசட்டுப்பார்வை
பார்த்தபடி
அவனைக் கடந்துவிடுகிறேன்
நானும் !!!

===========================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (21-Aug-14, 8:10 pm)
Tanglish : mazhaik kalaingan
பார்வை : 113

மேலே