பொன்னடியாரின் பொன்னுரை

சென்னையில் நூலகம் கு.சா.கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டு(1914-2014) விழாவில் பொன்னடியாரின் பொன்னுரை

இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘ குற்றம் புரிந்தவன்….” ராஜராஜன் படத்தில் ‘‘ நிலவோடுவான் முகில்….” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘ காதல் கனிரசமே…” போன்ற காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் நூற்றுக்கும் மேல் எழுதியவர் கு.சா.கி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் 101 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘ அருட்பா இசையமுதம் ” என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ‘‘அமுதத் தமிழிசை” என்னும் பெயரிலும் வெளியிட்டார்.
'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவிஞராகவும், தமிழரசு இயக்கக் கவிஞராகவும் திகழ்ந்து தமிழ்த்திரையுலகில் சாதனைகள் பல புரிந்த கு.சா.கி., அவர்களுக்கு 1966- ஆம் ஆண்டு தமிழக அரசு ‘ கலைமாமணி' விருது வழங்கியது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான 1978 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கானஇரண்டாம் பரிசினை கு.சா.கி. எழுதிய ‘‘ பருவ மழை ” என்னும் கவிதை நூல்பெற்றது.
கு.சா.கி. எழுதிய அமுதத் தமிழிசை , அருட்பா இசையமுதம் , அந்தமான் கைதி , இசையின்பம் , பருவ மழை, தமிழ் நாடக வரலாறு , கலைவாணன் (நாடகம்) ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

அவர் பிறந்த நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி-டோரா தம்பதி இணையர் அவர்களால் 19-08-2014 அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டு விழா சீரும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.விழாவை முன்னின்று நடத்திய ஞானாலயா நூலக நிறுவனர் பா. கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை வழங்கினார். மாமன்னர் கல்லூரியின் முதல்வர் மீ.வீரப்பன் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.

விழாவிற்கு மருத்துவர் எஸ்.இராமதாஸ் மருத்துவர் என்.ஜெயராமன் இராமுக்கன்னு லேனாசொக்கலிங்கம் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாக பிரபல திரைப்படப் பாடலாசிரியர் தமிழ்க் கவிஞர் மன்ற நிறுவனத் தலைவர் பொன்னடியார் அவர்கள் கு.சா.கி.யோடு சேர்ந்து எப்படியெல்லாம் கலைஇலக்கிய உலகில் கால்பதித்தோம் என்றும் இருவரும் பாரதிதாசனோடு பழகி வந்த நினைவுகளையும் கு.சா.கி. அவர்கள் தமிழ் மொழி இனம் நாடு என்னும் கொள்கையில் ஊறித் திளைத்து வெற்றிக் கண்ட பாங்கினையும் அனைவர் மனங்களும் ஈர்க்கும் படியாக உணர்ச்சித் ததும்பப் பேசினார். கு.சா.கி. 1943- ஆம்ஆண்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராகவும் இருந்தவர். அப்போதைய புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்களாட்சி ஏற்பட நடத்தியப் போராட்டத்திற்கு முக்கிய பங்குவகித்தார். 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் நெருங்கிய மாணவரகவும் தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. தொடங்கியதிலிருந்தே செயற்குழு உறுப்பினராக அக்கட்சியில் அங்கம் வகித்தார். உணர்ச்சிப் பொங்கப்பேசும் நட்சத்திரப்பேச்சாளராகவும் விளங்கினார்.தமிழ்நாட்டின் எல்லைகளை இணைக்கும் போராட்டங்களில் பங்கு கொண்டார்.மேலும் பாரதிதாசன் பெயரில் விருதும் பொற்கிழியும் வழங்க தாம் எடுத்துக்கொண்ட முயற்சியை நினைவு கூர்ந்தார். பாரதிதாசனின் வாழ்வியல் குறிக்கோளில் ஒன்றான நூலகம் நிறுவுதலை தாம் சென்னையில் அமைக்க உள்ளதாகவும் உறுதி கூறினார்.
திருச்சி கவிஞர் முனைவர் மா.தாமோதரகண்ணன் அவர்கள் தயாரித்தளித்த கு.சா.கி.யின் திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஒலி-ஒளிக் காட்சி திரையிடப்பட்டது.
புதுகை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சி.சேதுராமன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

எழுதியவர் : damodarakannan (23-Aug-14, 12:27 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 275

மேலே