நான் நனைந்தவன்

குடையேற்றி தீண்டாமை வளர்ப்பவர்களே.. ஒரு நாள் மழையில் பூரணமாக கரைந்திருக்கிறீர்களா? மழைக்கு சாதி தெரியாது.. சமத்துவம் மட்டுமே தெரியும். பூமி நனைகிறது... புறாக்கள் நனைகிறது... புல்பூண்டும் தவிர்ப்பதில்லை .. பிறகேன் மனிதன் மட்டும் மழையோடு பேச மறுக்கிறான்..? அறிவுச் செருக்கன் ஒருவன் சத்தமிட்டு "போடா பைத்தியமே.... மழையில் நனைந்தால் உடம்புக்கு ஆகாது " என்கிறான்.. எப்படி... எப்படி..? நாம் ஏற்றிவைத்த நச்சு கரைக்கிறது மழை.... கழுவும் மழைக்கு கறை பூசாதீர்... பைத்தியம்தான் எனக்கு... மழைமீது.
மழைக்கு உயிர் இருக்கிறது... காற்றடித்தால் மழை கூவிப்பாடும். வெயிலோடு காமம் துய்த்து வானவில் பிரசவிக்கும்.... பாறைகளில் சிற்பம் செதுக்கும்.... படுகைகளில் ஓவியம் வரையும்...
சாரலாய் உனைருசித்த
மழை...
பிரவாகமெடுத்து
கரைக்கத் துடிக்கிறது
நீ
மழைச்சாலையில் நடைபழகுகையில்...
என தன்னால் முடியாததை மழை செய்ததற்காய் திண்ணையோரம் அமர்ந்து மழையுடனான ஒரு பெண்ணைப் பற்றி வடிக்கிறான் காதலனொருவன்...
சன்னலோரம் நின்று
கண்சிமிட்டிச் சிரித்து
மழை சில்மிஷங்களை
சைகைகளாய் உணர்த்தி
திண்ணைக் காதலனிடம் காதல் வளர்க்கிறாள் பெண்ணும்.... இப்படியாக மழை காதலும் கற்றுக்கொடுக்கும்...
கறுப்புத் திரைகளிட்டு ஊனப்படுத்திக் கொள்பவர்களே.. தூறல் சுவாசிக்க வாருங்கள்... உடலை முத்தமிடக் கொடுங்கள் மழைக்கு.! மழை..... காதலிப்பவர்களுக்கு துரோகம் செய்வதில்லை.
பாத்திரங்கள் கொண்டு மழையை சிறைபிடிக்கும் பொழுதெல்லாம் சிறையிலடைவது மழை அல்ல.. நாம்....! பாத்திரச் சேகரங்கள் நுகர்ந்து "எவ்வளவு சுத்தம் பார்த்தாயா.....!!" என்று மூச்சுகளால் தழுவத்தவிர்த்தவன் ஒருவனும் இல்லை...! நாமாக ஓடிச் சென்று நிரம்பிக்கொள்ளத்தான் மழை கோடிட்ட இடங்களாய் பொழிகிறது.எத்தனை பேர் நிரம்புகிறோம்.?கருப்பு காட்டி மறுப்பு கூட்டி மழையில்
அமிலம் கலந்திருக்கிறோம் தெரியுமா...?
மழையில் குளித்தெழுந்து காற்றுபூசிக்கொள்ளும் முழு நிலவொளியின் அழகை எந்த ஒரு செயற்கையாலும் பிரதிப்படுத்த முடியாது. மழையின் மறுவீடு பூமி. பூமிக்குச் செல்லும் ஒரு நுண்வினாடிக்கு முன் தீண்டிப்பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாம்.. மழையில் உயிர் கரையுங்கள்.. உடல் கரையாது... இதோ... தோழி வந்துவிட்டாள்.. பொறுங்கள் கரைந்துவிட்டு வருகிறேன்.....!