நடந்து முடிந்த கதை - மணியன்

இன்றாவது நான் வேலை பார்த்த அலுவலகத்துக்கு செல்ல நேரம் கிடைத்ததே என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
விறு விறு என்று சென்று கொண்டிருந்தேன்.

எத்தனை ஆண்டுகளாயிற்று.சுமார் பத்து வருடம் முடிந்து விட்டிருக்குமா. ஆமாம் இருக்கலாம்.பேரன் கண்ணன் பிறந்த போது ஓய்வு பெற்றதாய் ஞாபகம்.அவனும் நல்லா வளர்ந்து இப்போது பள்ளிக்குச் செல்கிறான்.அவன் என்னைப் பார்த்து தாத்தா உங்க கை ஏன் இப்படி நடுங்குது தாத்தா என கேட்டதற்கு ஏதோ பதில் சொல்லி சமாளித்தது இன்னும் மனதில் இனித்தது.

ஏதோ பழைய விசயத்தை அசை போட்டபடி வந்ததால் அலுவலகம் வந்தது கூட தெரியாமல் தொடர்ந்து நடக்கப் போனவன் சட்டென்று நினைவு வந்து வாசலுக்குள் நுழைந்தேன்.

எப்போதும் நான் நுழையும் போதும் வெளியே வரும் போதும் சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி என்னைப் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாதது மனதில் வலித்தது.

உள்ளே நுழைந்தேன். அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தார்களே தவிர என்னை ஏறெடுத்துக் கூட யாரும் பார்க்க வில்லை. ஹெட் கிளார்க் சோமு அடப்பாவி உனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். நான் ரிட்டையர்ட் ஆன நாளன்று எப்படி கதறி அழுதாய். இப்போது உள்ளே வந்துள்ளேன்.என்னைப் பார்க்காமல் என் பின்னே தெரியும் காலண்டரைப் பார்ப்பது போல பாசாங்கு செய்கிறான். நான் இருந்து வேலை செய்த இருக்கையில் இப்போது சுந்தரம் உட்கார்ந்திருந்தான். அவன் முன்னே போய் நின்றேன். எனக்கு அருகில் நின்ற பியுன் முத்துவைப் பார்த்து ஏதோ சொன்னவன் என்னை அலட்சியம் செய்து தான் பார்த்துக் கொண்டிருந்த பைலை மேய ஆரம்பித்து விட்டான். எனக்கு எப்படி வலித்திருக்கும். நீங்களே சொல்லுங்கள்.
உடனே அலுவலகத்தை விட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வெளியே வந்து விட்டேன். ஒரு அடி எடுத்து வைக்கவே ஊன்றுகோலுடன் நடக்கும் எனக்கு எப்படித்தான் இவ்வளவு துணிச்சல் வந்தது என்று புரியவில்லை.

மனது வலி ஒரு பறம் தள்ள வேகமாக பஸ் நிறுத்தம் வந்து விட்டேன். எனக்கே என் மீது பொறாமை வந்தது. இவ்வளவு தூரம் வேகமாகவும் சீக்கிரமாகவும் வரும் அளவுக்கு உடலில் தெம்பு இருந்தும் நாம் முயற்சி கூட செய்யவில்லையே. பொறாமை இப்போது வெறுப்பாய் மாறியது.

இதோ நான் வழக்கமாக செல்லும் பஸ் வந்து விட்டது. பஸ்சில் பயணிகளோடு பயணியாக ஏறினேன். கண்டக்கடர் ஒவ்வொரிடமும் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்கும் போதுதான் நினைவு வந்தது. அய்யய்யோ. . நான் அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்து விட்டேனே. இப்போ என்ன செய்வது தெரிந்தவர் யாரேனும் இருக்கிறார்களா என நோட்டம் விட்டேன். ஒருவர் கூட தெரிந்த ஆள் இல்லை. என்னவோ என்னிடம் கட்டு கட்டாக பணம் இருப்பது போலவும் நான் மறந்து வந்து விட்டதைப் போலவும் நீங்கள் என்னலாம். ரிட்டையர்ட் ஆன நாள் முதல் இன்று வரை பையனின் கையை நம்பித்தான் என் பொழைப்பு ஓடுது. ஒரே பையன்தான் . செல்லமாக வளர்த்து ஆளாக்கி பெரியவன் ஆனதும் ஒரு கால் கட்டு போட்ட பிறகு அப்படியே மாறி விட்டான்.போதாக்குறைக்கு என் மனைவி சென்ற வருடம் ஒரு கார்த்திகை நல்ல நாளில் போய் சேர்ந்து விட்டாள். புண்ணியவதி. அவள் இருக்கும் வரை பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது. வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வது என்று இருந்தாள்.பாவி உள்ளுக்குள் கேன்சர் இருப்பது தெரியுமோ அல்லது தெரிந்தோ மறைத்தாளோ. போய் சேர்ந்து விட்டாள். நல்ல வேளை .முன் பக்கம் போன கண்டக்டர் பின்னால் வரவே இல்லை. இதோ என் ஸ்டாப் வந்து விட்டது. முதல் ஆளாய் இறங்கி இல்லை இல்லை குதித்து விட்டேன். ஆனாலும் பாருங்கள் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் வித்தை எனக்கும் வந்து விட்டதே.என பெருமைப் பட்டுக் கொண்டேன்.

தெரு முனை திரும்பும் போதே என் வீட்டின் முன் கூட்டம். நாற்காலிகள் போட்டு என் உறவுக்காரர்கள் பலர் உட்கார்ந்திருந்தார்கள்.வாசலில் பந்தல் வேறு போட்டிருக்கிறதே. சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் சோகமே உருவாக்கி அமர்ந்திருந்தார்கள்.என்னவோ நடந்திருக்கிறது. அதுதான் எனக்குப் புரியவில்லை.யாரும் என்னைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை. விறுட்டென்று வீட்டினுள் நுழைந்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி. அய்யோ நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. என் மகன் .நேற்று வரை எனக்கு மருந்து வாங்கக் கூட பணம் தருவதற்கு முனகியவன் .அவன் மட்டும் அல்ல.விளக்கேற்றுவதற்காக நான் தேடி அலைந்து கண்டுபிடித்த என் மருமகள் .எனது பேரன் என் காலைப் பிடித்து அழுதபடி அமர்ந்திருக்கிறார்கள்.

அப்போதுதான் நான் என்னைப் பார்த்தேன். நான் ஆசை ஆசையாகக் கட்டிய என் வீட்டின் நடு ஹாலில் படுத்திருக்கிறேன்.என் கழுத்தில் மாலை வேறு போட்டிருக்கிறார்கள். தலைமாட்டில் ஒரு விளக்கு வேறு எரிந்து கொண்டிருக்கிறது.ஒரு கட்டு ஊதுபத்தி வேறு பக்கத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. புகை எனனவோ நன்றாகத்தான் அறை முழுவதும் பரவி இருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் வாசனை ஏனோ வர வில்லை. . . . .



*-*-* *-*-*-* *-*=*-*

எழுதியவர் : மல்லி மணியன் (24-Aug-14, 2:33 pm)
பார்வை : 232

மேலே