என்ன செய்வது

”சட்டையை கழட்டினாப் போறும்னு ஆயிடுது. அஞ்சு நிமிஷத்துக்குள்ள சீழ் வழிஞ்சு சட்டையை ஈரமாக்கிடுத்து. ராகவன் மிரட்டிக்கூட பார்த்தான் துண்டு போர்த்திக்கிட்டுப் போன்னு. என்னதான் இருந்தாலும் வேலை பாக்கற இடத்துக்கு அப்படியெல்லாம் போக மனசு இல்லை.
இந்தமாதிரி ஒரு ஸ்கூல்லில டெம்பரவரியா வேலைக்கு சேர்ந்து காலந் தள்ளி ரிட்டையர்ட் ஆகப் போற கடைசி காலம் வரைக்கும் டெம்பரவரியாவே இருக்கறது ஒன்னும் சுலபமில்லை. அனுபவஸ்தன் பட்டம் எவனுக்கு சார் வேணும்? அதை வெச்சுண்டு கால் கிலோ காராச்சேவாவது வாங்க முடியுமா சொல்லுங்க. அடுத்தவன் வேலையும் சேர்ந்து நம்ம தலையில விழுகும். ஒழுங்காப் படிச்சிருந்தா……. ஹூம்…..
ஸ்கூலுக்கு போன ஜோருக்கு சட்டையை விட்டெறிஞ்சுட்டு தரையிலே குப்புர படுத்துருவேன். அழகேசன் வரமாட்டானான்னு இருக்கும். எல்லா எடுபிடி வேலையும் அவன் தான் பாத்துக்குவான். பாங்குக்குப் போவான்; எலெக்ட்ரிக் பில் கட்டுவான்; எல்லா ரூமையும் சுத்தம் பண்ணுவான்; கக்கூஸ் கழுவுவான். மூவாயிரம் ஒரு சம்பளம்னு இங்கப் போயி குப்பை கொட்டிட்டு இருக்கான் பாவி…..
ஒருமாசமா படாத பாடு படுத்துது. போன வாரம் தான் ராஜபிளவை ன்னு டாக்டர் கண்டுபுடிச்சார். முதுகு சதையே அழுகிப் போறா மாதிரி அருவெறுப்பா இருக்கு. மல்லாக்க படுக்க முடியல; சாஞ்சு ஒக்கார முடியல. வலியோ நாளுக்கு நாள் அதிகமாகுது. அறுத்து தொலைக்கலாம்னா சக்கரை குறையவே மாட்டேங்குதே.
வாயைக் கட்டுப்படுத்தறதெல்லாம் நடக்காத காரியம். அதைத் திங்காதே இதைத் திங்காதேன்னு சொல்றது ரொம்ப ஈசிங்க….. செயல்படுத்தறதைப் பத்தி யோசிக்கவே முடியாது.
சுப்பு வாத்தியார்கிட்டே எவ்வளவோ கேட்டுப் பாத்துட்டேன். அறுவை முடிஞ்ச ஒடனேயே வந்துடுறேனேன்னு….. அவர் கறாரா சொல்லிட்டார் ”ராமகிருஷ்ண ராவ், நீங்க வந்து இவாளுக்கு என்ன வேலைன்னு சொன்னாப் போறும். நீங்க அக்கடான்னு படுத்துக்கோங்கோ ஒங்களை யாரு வேணாங்கறது. ராவ்ஜீ வராமே ஒரு வேலையும் ஓடாது. ஒங்க உழைப்பும் சாமர்த்தியமும் எவனுக்கு வரும்” ன்னு ஒரு மூட்டை ஐஸை முதுகுலயே வெச்சுட்டார். ஹெட் மாஸ்டரே சொல்லிட்டாரே! நான் வரலேன்னா வேலை சரியா நடக்காதுதான். ஆனா ராஜபிளவையோடயே வேலைக்கு வந்தான்னு எனக்கு ஸ்கூல் வாசல்ல சிலையா வெப்பாங்க?
வீட்லேர்ந்து அஞ்சு நிமிஷ நடையிலே ஸ்கூல்…. அதே வரிசையிலே டாக்டர் சீனுவோட கிளினிக்.. தினமும் அங்க போயி ஊசி போட்டுக்கிட்டாதான் ஸ்கூலுக்கு போக முடியும்.
ஹூம்… இந்த ராகவன் பயலுக்கு ஒரு வேலை கிடைச்சா தேவலை. அவனும் என்னென்னமோ செஞ்சுப் பாக்கறான் ஒன்னும் அமைய மாட்டேங்குதே. இப்போ வரைக்கும் யார் கையையும் நம்பி நிக்கிற நிலைமை இல்லை. பூர்வீக நிலத்தை வித்து இஞ்சினீயரிங் படிக்க வெச்சேன். அரியர் இல்லாமே பாஸ் பண்ணான். என்ன பிரயோஜனம்?
அப்பாடா…. அழகேசன் வந்துட்டான். பஞ்சை வெச்சு சீழ், இரத்தமெல்லாம் துடைச்சி விட்டு டெட்டால் தடவி க்ளீன் பண்ணுவான். எனக்கு கொஞ்சமும் வலிக்காமே இதையெல்லாம் செய்யற கலை இவனுக்கு மட்டுந்தான் தெரியுது. ராகவன் கூட பெயில் தான்.
ரெண்டு நாளைக்கி முன்னாலே- அப்பத்தான் துடெச்சி விட்டுப் போயிருப்பான். மறுபடியும் சீழ் வடியுது. “அழகு வாடா சீக்கிரம்” ன்னு குரல் கொடுக்கறேன். கையக் கழுவிண்டு ஓடி வந்தான். பாவம் சாப்பிட்டுக்கிட்டு இருந்தான் போலிருக்கு.
ஆள் நல்ல கருப்பா இருப்பான். பல்லெல்லாம் காவிக் கறை. குட்டை தான்…. ஒடம்பு தேக்கு மாதிரி இருக்கும். எனக்கு பீடி வாடை சுத்தாமாப் பிடிக்காது. அந்தக் கருமத்தை ஊதிட்டு கிட்டே வராதேடான்னு திட்டித் தீத்துருவேன். அதிகமாப் பேச மாட்டான். பதிலுக்கு பல்லை இளிப்பான் அவ்வளவுதான்.
வழக்கம் போலவே ராகவன் சாப்பாட்டை எடுத்துண்டு வந்தான். முன்னாடி மாதிரில்லாம் சாப்பிடவே முடியலை. எனக்கு தனியா சாப்பிட்டு பழக்கமேயில்லை. என்ன பண்றது… இப்பல்லாம் சுப்பு வாத்தியார் முதற்கொண்டு யாருமே என்னோடே சாப்புடறது இல்லையே. இந்த ரூமே ஒரு தீவு மாதிரி ஆயிட்டது. அவங்களை குத்தம் சொல்றது என் நோக்கமில்லை. சீழ் வடிஞ்சிண்டு ஒருத்தன் இருக்கற இடத்துல நானும் தான் சாப்பிட மாட்டேன்.
நான் வந்ததுமே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கேக்க இத்யாதி ஸ்டாபுங்க வருவாங்க. அப்புறம் சந்தேகம் கேக்க வருவாங்க. அழகு மட்டும் தான் நான் நல்லா இருக்கேனான்னு பாக்க வருவான். மத்தவங்களும் ”நல்லா இருக்கீங்களா” ன்னு கேப்பாங்க…. வந்துட்டோமேன்னு கேப்பாங்க. அழகு மட்டும் கேக்கறதுக்காகவே வருவான்.
இன்னைக்கும் அழகு வந்தான். அப்பத்தான் நான் டிபன் கேரியரைத் திறந்து வச்சேன்.
”சாப்பிட்டையாடா?”
“இல்லீங்க சாமி. இனிமேல்தான்”
இதுவரைக்கும் நான் கேட்டதேயில்லைங்கறதால ஆச்சரியமாப் பாத்தான். இந்த வளாகத்துக்குள்ளே யாருமே அவனைக் கேட்டதில்லையே!
“எடுத்துண்டு வாடா. சாப்புடுவோம்” ன்னேன். நான் ரொம்ப கம்பெல் பண்ணதால எனக்குக் கம்பெனி குடுத்தான்.
அவன் கைகழுவப் போறச்சே சுப்பு உள்ளே நுழைஞ்சார். அவருக்கு நெற்றிக் கண் இல்லை. நல்ல வேளை…
என் மேலே கூட அவருக்குக் கொஞ்சம் வருத்தந்தான். ”என்ன இவன்கூட சமமா சாப்பிடறயே” ன்னு சொல்ற மாதிரி பாத்தார். இதுக்கெல்லாம் நான் என்ன சார் பண்ண முடியும்?”

எழுதியவர் : ஹரி (25-Aug-14, 8:56 pm)
சேர்த்தது : ஹரி பிரசாத்
Tanglish : yenna seivathu
பார்வை : 293

மேலே