நக்கிப் பிழைக்கும் நாக்கு

பாம்புக்கு இரண்டு நாக்கு இருந்தாலும்
வீம்புக்குப் பேசுவதில்லை
ஒத்த நாக்கின் சித்தப்படியே
மொத்தக் குழப்பமும் மனிதனில்

பிளவு பட்டும் நாகநாக்கு இனத்துக்கு
நலவு கெட்டதில்லை
தனிப் பட்ட மனிதநாக்கு தன்னினத்தை
பிளவை விட்டு பிரித்ததில்லை

மூக்களவு நாக்கு நீளும் மாடுகூட
வாக்குத் தராமலே பால்தரும்
உதட்டோடு நின்று விட்டதால் மனிதனாக்கு
வாக்கும் கூட உதட்டளவில்தான்

வார்த்தைக்கு பஞ்சம்வைக்காத நாக்கு
நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கும்
அர்த்தத்தை இரட்டிப்பாக்கும் நாக்கு
வருத்தத்தில் உருட்டிப்பார்க்கும்

புரள்வதற்கு ஏற்றாற்போல் நாக்கில்
திரள்வது சொல்
உதட்டுக்கு பதட்டங்கொடுத்து வாக்கால்
அதட்டும் சொல்


மனிதனுக்கு மட்டுமுரிய சிறப்புத்தகுதி
தெளிவான பேச்சு
மனிதனாக்கும் மனிதநாக்கு மனிதனை
மண்ணாக்கும் நிலையாச்சு

பேச்சு ஏச்சாகவும் அறம் புறமாகவும்
வாசகம் தூஷனமாயும் பாட்டு திட்டாகவும்
கக்கல் நக்கலாகவும் மக்கள் மந்தையான
தனிச்சிறப்பும் கிடைச்சாச்சு

எழுதியவர் : மது மதி (25-Aug-14, 4:00 pm)
பார்வை : 246

மேலே