தாத்தா
தூங்கும் வரை குதூகல விளையாட்டு
விழிக்கும் வரை சலனமில்லாத் தூக்கம்
மெல்ல தட்டி எனை எழுப்பி
செல்லமாகக் காலைக் கடன் முடித்து
பள்ளிச் சீருடை இட்டு வைத்து
பள்ளி வரை கொண்டு விட்டு
மதியம் வந்து கூட்டிச் சென்று
வழியில் கேட்ட தெல்லாம் தந்து
நான் மகிழத் தான் மலர்வார்
எண்ணியது எல்லாம் கேட்பேன் தினம்
எண்ணி எண்ணிப் புதிதாய்க் கேட்பேன்
என்ன ஏது கேட்காமல் தினம்
தின்னப் பல வாங்கித் தருவார்
பிடிவாதம் நான் பிடிக்கையில் எனை
திருத்த பலர் முயல்கையில் அரணாக
முன் நின்று அரவணைத்துக் காப்பார்
அம்மா அப்பா அதட்டலும் அடுத்தவர்கள்
புகார்களும் சும்மா ஊதித் தள்ளியே
எனைச் சொகுசாய் பாங்குடன் வைத்திருப்பார்
என் முட்டல் மோதல் குட்டலுக்கும்
முடிவு இல்லா சேட்டைத் திட்டலுக்கும்
இன்ன பல பிழைகளுக்கும் என்பால்
வாதிடும் என் கட்சி வக்கீல் அவர்!
தா தா என்றால் தரும் தாத்தா
கூன் முதுகுத் தாத்தாவை தினம்
நான் தோள் சுமக்க வைத்திடுவேன்
கழுத்தை கையால் கட்டிக் கொண்டே
என் கட்டை விரல் சூப்பிடுவேன்
தாத்தா இருக்கையில் கவலை எனக்கேது!
என் அழகான வாழ்க்கை ஆனந்தமே!
-----முரளி