ஆழியின் பினாமி - சுனாமி

ஆழியே!
பூமியில்
உன் பங்கு
மூன்றில் இரண்டு!
இது போதாதென்று
ஜப்பான் மீது
படை எடுத்தாய் -
பகை முடித்தாய்;
பேரலையை
துணையாய் கொண்டு!
வீடுகளும், கார்களும்,
கப்பலும் கூட
உன்னை பார்த்து
ஓடின மிரண்டு -
கரை புரண்டு!

இரை அளி...'தாய்'
என
உன்னிடம் வந்தவர்க்கு
மட்டுமா நீ
இரை அளித்தாய்?
இல்லை மற்றவர்க்கும்
சேர்த்துதான்!
உன்னை நம்பியோர் தம்
வாழ்வுக்கு
வழி
வகுத்தாய்!
ஒரு சாண்
வைற்றின் உணவுக்கு
நீயே
உப்பானாய்!
அதனாலேயே
தாய்க்கு
நீ
ஒப்பானாய்!
இரையிட்ட
நீயே
பல உயிர்களை
இரையாக்கி கொண்டதால்
மாந்தர்தம் கணக்கில்
தப்பானாய்!

தீர்ந்து விட்டதா
உன் பசி?
உன் கோர
தாண்டவத்தால்
சீரழிந்து - சின்னாபின்னமாய் -
குப்பை மேடுகளாய்
கிடப்பதை கண்டு ரசி!
இப்பழி செயல்
உனக்கு
தேவைதானா
என்று யோசி!
தாய்க்கு
மகனில்லை;
தம்பிக்கு
அண்ணனில்லை;
சிலருக்கு
யாருமே இல்லை;
உன்னை
சபிக்காதவர்
உலகில் இல்லை!

போர் முறையில்
புதுப்புது சாதனை!
உன் மீதுதான்
கண்டம் விட்டுத்தாவும்
ஏவுகணை
சோதனை!
இச்சோதனை
தந்ததா
மன வேதனை - தீய போதனை?
ஸ்கை லேபுக்கும்,
விண்கலத்திற்கும்
நீயே பலியானாய்!
மனிதர்களுக்கு
கிலியானாய்!
உன்னை
சல்லடையாய்
துளைத்ததாலா
இந்த சீற்றம்?
காரணம் எதுவானபோதும்
தேவை
உன் மன மாற்றம்!

ஓ!
இப்படித்தான்
பல நாடுகளை
உன்
வசமாக்கி
கொண்டாயோ?
செய்தது
நீயானபோதும்;
உன்
'பினாமி'
'சுனாமி' மட்டும்
நிரந்தரமாய்
தேடிக்கொண்டது
பழி!
நாட்டை அபகரிக்க
இனி
வேண்டாம் இந்த
வழி!
அமைதியாய்
சென்று விடு
வந்த வழி!
இனி நிம்மதியாய்
மக்கள் வாழ
வாழ்த்தி விடு வழி!

எழுதியவர் : (22-Mar-11, 10:42 am)
சேர்த்தது : Mohamed Navas Khan
பார்வை : 305

மேலே