என் எழுதுகோல் ஓய்வு பெறுகிறது-----அஹமது அலி----

என் எழுதுகோல்
அழுததெல்லாம்
கவிதையென்றால்...

இதோ...இன்று...அழுதழுது
கண்ணீர் வற்றி
காய்ந்து போகப் போகிறது
சாய்ந்து போகப் போகிறது

தன் கடைசிக் கவிதையை
சொல்லிச் சொல்லி
ஓய்ந்து போகப் போகிறது

அறுபது பாகை கோணத்தில்
அருந்தமிழ் பேசிய
என் ஒட்டு விரல்
படுக்கை நிலைக்கு போகிறது

எங்கோ எடுத்து வீச
ஏதோ ஒரு குப்பையில்
என்னைப் பிரிந்து
ஏங்கிக் கிடக்கப் போகிறது

சிந்தனையுடனான
சிறு சிறு சந்திப்புக்களை தப்பாமல்
சிறு குறிப்பெடுத்து பதிவிட்ட
தொப்பிப் புலவன் தன்
அத்தியாயம் முடிக்கப் போகிறான்

இன்ப துன்பம்
வரவு செலவு
என்று எதிர்பட்டதையெல்லாம்
ஏட்டில் நிறைத்தவன்
கூடு பிரிகிறான்

எழுத்தின்(ல்) தடம் பதிக்க
இடம் கொடுத்த ஏட்டிற்கும்
பார்வைகள் தந்து
பல கருத்துக்கள் பகிர்ந்திட்ட
கண்களுக்கும் நன்றி கூறி
கடமை முடிக்கப் போகிறான்

ஆம்...!
இதுவரை கவிதைகளை
எழுதியது நானா? எழுது கோலா?
என்னால் எழுதப் பட்டது...
எழுதியது?

என்ற கேள்வியோடு
முற்றுப் பெறுகிறது.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (27-Aug-14, 3:30 pm)
பார்வை : 331

மேலே