கூட்டல் கழித்தல் பெருக்கல்

கல்வியும் கேள்வியும் கொண்டநல் கொள்கையும்
நல்வினை நாணயம் நாடுவாய் - கற்பித்தோர்
பெற்றோர் பணிந்துநீ பெற்ற அறிவினால்
கற்றவை பெருக்கிக் காட்டு

அயர்விலாத் தேடல் அசைவிலா ஊக்கம்
மயர்வில் மதிநலம் மேவு - அளவிலா
இன்பங்கள் ஈட்டி இறைவழி நாடியே
நன்மைகள் கூட்டி இரு

வேண்டா விருப்பொழித்து கூடாப் பகையொழித்து
ஈண்டாத் துயரொழித்து நீயிருப்பாய் - மாணவா
ஆணவம் என்கிற தீமை கழித்தென்றும்
மாணுற வாழ்தல் மறை

மாண்அவா கூட்டி மனிதம் பெருக்கியும்
ஊன்அவா தன்னைக் கழித்திடு - மாணவா
ஆன்றோர் பெரியோர் அகந்தை களைந்தநற்
சான்றோர் வகுத்தவை சால்பு

எழுதியவர் : அரங்க.ரகுநாதன் (27-Aug-14, 4:50 pm)
பார்வை : 81

மேலே