கூட்டல் கழித்தல் பெருக்கல் o0o மாணவர்களுக்கான அறிவுரை கவிதை

அதிகாலை படிப்பில் ஆழ்ந்த கவனம்
ஏற்றிடும் பாடம் நினைவினில் கூட்டி
தேகப் பயிற்சி தொடர்ந்தெனப் பழகிட
சோம்பல் கழிய புத்துணர்வு பெருக்கல்!!!

மிதவெப்ப நீரில் நீராடல் முடித்து
தாய்தந்தை தெய்வம் மனத்தால் தொழுது
பண்பினை வளர்த்து அன்பினை கூட்டி
நாட்களைக் கழிக்க மகிழ்ச்சி பெருக்கல்!!!

பள்ளித் தெய்வம் ஆசான் வணங்கி
கல்வியொடு குரு அறிவுரை கூட்டி
தூய நட்பினை தெளிந்து சேர்ந்திட
தீமைகள் கழிய நன்மைகள் பெருக்கல்!!!

நாளை படிப்போம் என்பதை மாற்றி
அன்றன்று பாடம் மனதினில் கூட்டி
தேர்வது வந்தால் பயமது விலகிட
தோல்வி கழிய மதிப்பெண் பெருக்கல்!!!

விடலைப் பருவம் அறியா தீமைகள்
வந்தே கெடுக்கும் விடலையர் அறிக
கேடுகள் தவிர்க்க விழிப்பினை கூட்டிட
இடர்கள் கழித்தலில் இன்பம் பெருக்கல்!!!

"பார்ட்டி ட்ரீட்டு" மதுவகை பழக்கம்
போதைக்கடிமை ஆகா வண்ணம்
மனதில் உறுதிதனையே கூட்டிட
சாய்தல் கழித்தலில் உயர்தல் பெருக்கல்!!!

வாழும் வகைகளை சிறப்புடன் வகுத்து
வாழ்ந்து காட்டு சிறப்பினை கூட்டி
அறிவுடன் ஆற்றலில் வாழ்வினை கழிக்க
செல்வங்களோடு புகழும் பெருக்கல்!!!

எழுதியவர் : சொ.சாந்தி (27-Aug-14, 11:42 pm)
பார்வை : 148

மேலே