சாரளம் திற

சாரளம் திற, சுவாசி என்றான் நண்பன்,
முயற்சிப்போம்:
சன்னல் திறந்தேன்
சாகாச் சூரியன் சிரித்தான்
ஏளனப் பார்வையால்
எனைச் சுட்டு எரித்தே!
தென்றல் காற்றில்
சாக்கடை துற் நாற்றம்
கடகட எனக்
கழிவு நீர்ஊர்திப் பேரொலி
கனரக வாகன
புகை புழுதிக் காற்று
சுற்று முற்றும்
பசுமையில்லாப் பல்லடுக்கு அகங்கள்
மூடிய சன்னல்கள்
முகம் காட்ட மறுக்க
எதற்காக சன்னல்
திற என்றாய் நணபா?
ஓ!
மனக் கதவைத்
திறக்கச் சொன்னாயோ?
முயற்சிப்போம்....
பார்க்கும் இட மெல்லாம்
பாரா முகங்கள்
செல்லில் முகம் புதைத்து
துலைத்த அகங்கள்
கண்பேசா வாய் பேசி
நகரும் சனங்கள
கவிதைகள் மூலம்
கடக்குமோ இக்கணங்கள்
பள்ளிப் பிள்ளைக்கும்
பரவசம் மிக அவசரம்
பாரம் சுமந்து
முதுகோ கூன் நிலவரம்
பாடம், special class,
டூசன், கோச்சிங்
எல்லாம் முடித்தபின
ஏது ரிலாக்சிங்?
நண்பா இங்கே நான் எதைத் தேடுவது?
பாதையில் சென்றால்
பலவித மனிதர்கள்
போதையில் சிலர்
மன உபாதையில் பலர்
பாரா முகங்களில் யார் மனம் நாட
கூறாய் நண்பா
என் சன்னல் திறந்திருக்கு!
அன்புடன்
முரளி
===================================
நண்பர் Ramani Loganathan இதே தலைப்பில் எழுதிய கவிதைக்கு பதில் கவிதை...