புரிந்த மாடுகள்
எங்கள் வீட்டில்
நிறைய மாடுகள்...
அப்போதெல்லாம்
ராஜேஷ்குமார்,
ஈவெரா பெரியார்,
பாட்டு புத்தகம்,
பலான கதைகள்...
எல்லாம் படிப்பது
'மாட்டுக் கொட்டா'யில்தான்
மாடு என்றாலே
எங்கள் அப்பத்தா
ஞாபகம்தான் வரும்.
அப்பத்தா
மாடுகளை
அப்படி பார்த்துக் கொள்ளும்
மாரிசன் , சுபாகு
மாண்டவி , ஊர்மிளை
என்றெல்லாம்
பெயர் வைக்கும்.
அவைகளுக்கு...
பிரசவம்,
தாய் சேய் பராமரிப்பு
எல்லாம் அப்பத்தாதான்.
எந்த திருமணங்களுக்கும்
அப்பத்தா வராது
"ஊர்ல
மாடு வச்சிருக்கறவன்
ஒரு விசேஷமும்
போக முடியாது"
சென்றுவிடும்.
கறவை நின்ற
மாடுகளை பிடிக்க
சிலர் வருவர்.
அப்பத்தா கொடுக்காது
"அது இங்கியே
சாவட்டும்டா"
சொல்லி விடும்.
எங்களை ,மாடுகளை
எல்லோரையும்
ஊட்டிவளர்தத அப்பத்தா
ஒருநாள்
தடுக்கி விழுந்தது
இடுப்பு உடைந்தது.
அப்பத்தாவை கவனிப்பது
பிறகு எல்லோருக்கும்
போட்டியாகி
கறவை நின்ற அப்பத்தா
கவனிப்பாரற்று
செத்துப்போனது
ஆனால்
அதன் பெயர் கொலை
என்று மாடுகள்
பேசிக் கொண்டது,