குழந்தை சிந்திய அரிசிகள்

பக்கத்து வீட்டில்
அம்மா
கடன் வாங்கி வந்து
வைத்திருக்கும்
அரிசி எனத்தெரியாது
தன் பிஞ்சுக்கைகளால்
அள்ளியிறைத்து
விளையாடுகிறது
குழந்தை !
அதுகண்ட
அம்மாவோ
பதறிப்போய்
தன்னையறியாது
குழந்தையை
அடித்து விடுகிறாள் !
அடிபட்ட வலி
சுள்ளென்று தாக்க
அம்மா அடித்த
காரணம் அறியாது
உதட்டைப் பிதுக்கிகொண்டு
அழத் தொடங்குகிறது
குழந்தை !
குழந்தை
அழுவது சகியாத
அம்மாவும்
குழந்தையைக்
கட்டிக்கொண்டு
அழுகிறாள் !
கீழே சிந்திய
அத்தனை அரிசிகளையும்
பிரசாதமென
பொறுக்கிக் கொள்கிறார்
கடவுள் !
=======================
குருச்சந்திரன்
-