தூக்கத்தைத் திருடியவள்

எனதிமைத் தோகை
விரி கருவிழி
கரும்புத் தோட்டத்தினை
மிதித்துத் துவசம்
செய்த
கரும் பெரும் வாரணம்
நீயே யெனது
காலைகளின் இமைகளை
உலர்த்தி மடித்து
வழியனுப்பவியலா
எனதிரவுகளை
வாங்கிக் கொள்கையில்
இன்று மீண்டும்
நிலவு தன்னை
அவிழ்த்துக் காயவைப்பதற்குள்
வழக்கம் போல்
என் தூக்கத்தினை
களவாடிச் சென்று விடு
ஏனெனில் -
மாத்திரையிட்டும்
வர மறுத்த
தூக்கத்தினை இம்சிக்குமெனது
நீண்ட இரவின்
தீக்குச்சியை
ஊதி அணைக்கச் செய்யும்
பிரயத்தனம்
நீ கைப்பற்றியதாயிருக்கும்
நிசிகளில்
என்விழிகளின் இரு பக்கமும்
தீப் பந்தங்களை நட்டு
தூக்கம் எனை நெருங்க
முடியாத படிக்கு
நீயுனது
சேவகர்களை நியமித்திருக்கிறாய் !
வேறெந்த இரவுகளையும்
விட
தூங்கவே முடியாத படி
என்தலையணை மடிப்புகளில்
நீயமர்ந்து
பஞ்சுகளை பாறையாக்கி
கொதிக்குமுனது
நினைவுகளை ஊற்றிச்
செல்கிற இந்த
இரவினை நீயே எடுத்துக் கொள் .