வெண்பாக்கள்
கற்ற தெதுவும் கருத்தினில் நீதரும்
உற்ற அருளுக் கொருநிகரோ?-கொற்றவா
நற்றமிழில் நானெழுத நாவமர்த்துன் நாமத்தை
அற்றவை நீக்கிஎனை ஆள்.
தமிழ்த்தாய் அறிவர் தரணியில் உள்ளோர்
தமிழ்கவி என்போன் அவள்மார்-தமிழ்ப்பால்
அருந்திய பிள்ளை அவர்களில் நானும்
இருந்திடும் பிள்ளை இனி .
சீர்த்தமிழ் சிந்தனை சிற்பியாம் ஐயாவெம்
பார்புகழ் பாவலர் பண்பாளர்-சேரிடம்
சென்றடை சீனிநை னாமுகம் மத்தைநாம்
என்றுதான் காண்போம் இனி
இலக்கணம் சொல்வதில் ஈடற்ற பாங்கும்
தலைக்கனம் அற்றநல் மாண்பும்- இலக்கதாய்
நற்றமிழ் காத்து நனியுற வைப்பதில்
பற்றது கொண்டதில் பார் .
தமிழையே மூச்சாய்த் தமிழையே பேச்சாய்த்
தமிழையே வாழ்வாய் உணர்ந்து -தமிழராய்த்
தம்மொழி காக்கும் தகையராத் தோன்றிய
நம்மொழி தந்தை இவர்.
வெண்பா எழுதிட வேண்டிப் பினாங்குநான்
உன்பால் விரைந்து வருகையில்- அன்பாய்
புரியும் வகையில் புலமை விளக்கும்
விரியும் உனதறிவு வான் .