தொலைந்து போன நீ
சிறகு உதிர்த்த இறகொன்று
சுமக்க முடியாத பிரிவின்
கனத்துடனான கல்லறைத்
தடங்களாய் உன் சுவடுகள்
நிராசையாகிப் போன
ஆசைகள் புதையுண்ட மண்ணில்
மறக்க முயலும் உன்மீதான மையல்,
அவை முட்டி எழும் விதை மொட்டுக்கள்
சில மாற்றங்களின் வித்துக்கள்
மரணங்களில் பதியனிடப்பட்ட
கல்லறைச் செடிகளில்
பூத்துக் குலுங்கும்
புது மலர்கள்
சாவின் வாசம் அறியாதவை
இறப்பின் கரங்களில்
தவழும் மலர்கள் உறங்கும்
இதயங்களுக்குச் சொந்தமாவதில்லை
துணையிழந்து போனதற்காக
அச்சமில்லை எனக்கு
இணையென்ற சொல்லுக்கு
அர்த்தம் நீயுமில்லை
உன்னில் விரும்பித் தொலைத்த
என்னைப் பிரித்தெடுத்து
தொலைந்து போகட்டும்
உன் ஞாபகங்கள்
மீண்டும் நீயற்ற நானாகப்
பிறந்திட வழிவிடு!!