நீலமணிக் கண்கள்

ஏன், என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? பயித்தியம் போலவா நான் இருக்கிறேன். பின் ஏன் போவோரும் வருவோரும் என்னை அப்படி முறைத்துப் பார்க்கிறார்கள்!. ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே பயித்தியம் என்பதற்குக் காரணமா? அல்லது பயித்தியம் பிடிக்கக் காரணமா?

அந்த நீலமணிக் கண்கள். சாண்டில்யனின் யவன ராணியில் சொல்லப்பட்டதே. அந்த அதே நீலமணிக் கண்கள்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அந்த கண்களில் அவ்வப்போது பிரதிபலிக்கும் அழகு, அர்த்தம், கூர்மை, பயம், வெறுப்பு, மருட்சி, கோபம், ஏகத்தாளம், நையாண்டி,, அத்தனையும் என்னை இப்போது இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அந்த கண்கள் இனி பார்க்கக் கூடாது. ஆம், உண்மைதான், அந்த கண்கள் மீது எனக்குக் காதல் இருந்தது ஒரு காலத்தில், அந்தக் கண்கள் என்னைக் கட்டிப் போட்டது பின்னொரு காலத்தில். அதே கண்கள் என் மேல் வெறுப்பை உமிழ்ந்து என்னை வெறும் பயலாக்கி எனக்கு எதிர் காலமே இல்லாமல் அதனை கேள்விக் குறி ஆக்கி விட்டது. அந்த கண்களில் பார்வை மட்டுமல்ல; அதனை தாங்கியவளின் கதையும் முடிக்கப் பட வேண்டும். ஆம், நான் முடிவு செய்து விட்டேன். நான் ஒரு முறை முடிவு செய்தால் அதனை யார் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டேன். அவள் உறங்கிக் கொண்டு இருக்கிறாளா என உறுதி செய்திட அவள் அறையில் மெல்ல எட்டிப் பார்க்க வேண்டும்.

இரவு பதினொரு ஐம்பது என்பதை கையில் இருந்த செல் போன் காட்டியது. இந்த மங்கல் ஒளியில் மட்டுமே நான் நகர வேண்டும். அதிக வெளிச்சம் கூடாது. அந்த கண்கள் அதனைக் கண்டு பிடித்து விடும். அதோ அவள் அடுத்த அறையில்தான் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். நான், என் இதயம் படபடக்க, மெல்ல அடி மேல் அடி வைத்து நடக்கிறேன். கதவை நான் எட்டி விட்டேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கதவை திறந்து அவளுக்குத் தெரியாத கோணத்தில் நின்று அவளை பார்க்க வேண்டும். அவள் தூங்குவதை உறுதி செய்த பின்னரே அகலமாகத் திறந்து செல்ல வேண்டும்..

கதவை நெருங்கி, அதன் திருகிப் பிடியை ஓசை இன்றி திருப்புகிறேன். பட பட வென்று என் இதயம் அடித்துக் கொள்கிறது. வயிற்றில் புளி கரைப்பது போல் ஒருவித உணர்வு. இதுதான் அட்ரினலின் சுரப்பதுவோ. என்னவோ இருந்து விட்டுப் போகட்டும். இந்த நேரம் பார்த்து ஒரு மூஞ்சுறு ’க்ரீச்’ என என் காலின் இடையில் ஓடி என்னை பயமுறுத்துகிறது.. ஒரே நசுக்காக நசுக்கி விட வேண்டும் என்ற எனது எண்ணத்தை மாற்றி, சப்தம் செய்யக் கூடாது என்ற காப்பு உணர்வில், காலை மட்டும் நடராஜர் போல் தூக்கி அந்தரத்தில் நிற்கிறேன். அவள், இந்த சிறிய ஒலிக்கு சிணுங்கி, நெளிந்து, புரள்கிறாள். “அடச் சே”, இந்த எலி அவளை எழுப்பி விட்டு விட்டதே!. அப்படியே நிற்கிறேன். அவளையே பார்த்தபடி கதவைப் பிடித்தபடி நிற்கிறேன்.


கூரிய முனையுடைய அவளது மூக்கு அந்த இரவின் மெல்லிய ஒளியிலும் பிரகாசமாய் ஒளிர்கிறது. அந்த மேட்டு நெற்றியும், அதில் புரளும் மயிர் கற்றையும், அவள் பேரழகிதான் என்பதை எடுத்துக் கூறின. ”நாசக்காரி”, என் பற்களை நான் கடிக்கிறேன். பல்லுக்கும் காலுக்கும் சம்பந்தம் உண்டா என்ன? கால்களில் வலி எடுக்கிறது. மெதுவாக பின்புறம் கையில் வைத்து இருந்த செல் போனில் மணியைப் பார்க்கிறேன். பன்னிரண்டு இருபது. அரை மணி நேரம் முயன்றும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே என மனம் பதைபதைத்தது. இன்று எப்படியும் முடித்து விட வேண்டும். எங்கோ ஒரு ஆந்தை அலறியது. ஆயினும் அவளிடம் ஒரு சலனமும் இல்லை. இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

என் பின் மண்டைக்குள் டிக் டிக்கென ஓசை கேட்க ஆரம்பித்து விட்டது. இதுதான் எனக்கு ஸ்டாப் வாட்ச். அதன் ஒலி நான் இங்கு வந்ததில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஏனோ அது அளவுக்கு அதிகமாய் அடிக்க ஆரம்பித்து ஓசை கூடிக்கொண்டே போயிற்று. அதன் ஒலியில் அவள் எழுந்து விடக் கூடும். நான், பின் மண்டையை அழுத்தி ஒரு துவாலையில் கட்டிக் கொள்கிறேன். ஆயினும் அது நிற்கவில்லை. அது இப்போது நீலமணிக் கண்கள், நீலமணிக் கண்கள் என சொல்வதுபோல் எனக்குக் கேட்கிறது. காதுகளை
பொத்திக் கொண்டு இப்போது கேட்கிறதா என மூச்சு விடுவதை நிறுத்தி விட்டுப் பார்க்கிறேன். இப்போதும், டிக், நீலமணி, டிக் கண்கள், டிக் நீலமணி, டிக் கண்கள் என விட்டு விட்டு ஒலிப்பது கேட்கிறது. இருக்கட்டும் ஒருவழியாய் இதனை முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறேன்.

நான் அறையின் உள்ளே நுழைந்து விட்டேன். நல்ல வேளை அந்தக் கண்களை நான் பார்க்கும் அவசியம் எனக்கு இருக்கவில்லை. அவள் அந்தப் புறமாக திரும்பிப் படுத்து இருந்தது எனக்கு வசதியாகப் போய் விட்டது. பட பட என இதயம் அதி வேகத்தில் துடிக்க, டிக் டிக் ஓசை அறை எங்கும் எதிரொலிக்க நான் கால் மாட்டில் இருந்த தலையணையை எடுத்து அவளது நீலமணிக் கண்களின் மேல் பொருத்தி அமுக்கினேன். வீஈஈஈக் என ஒரு ஒலி. அவ்வளவுதான், கால்கள் ஒருமுறை இழுத்து பின் விறைத்து விழுந்தன. கதை முடித்து விட்டேன் என்பதால் இப்போது பார்வையை இழந்து விட்ட அந்த நீலமணிக் கண்களை நான் தைரியமாக ஏறிட்டுப் பார்க்கிறேன். “கோழையே, என்பதுபோல் அந்த விழிகள் என்னை முறைத்துச் சொல்வது தெரிந்தது. என் தலையில் இருந்த துவாலையை அவிழ்த்து அந்த கண்களின் மேல் வைத்துக் கட்டினேன். என் தலைக் கட்டு அவிழ்ந்ததில் பின் மண்டையில் டிக் டிக் ஓசை இன்னும் பெரிதாய் கேட்க ஆரம்பித்து விட்டது..

அந்த அறையில் இருந்த சோபாவில் இருந்த பஞ்சுப் பொதிகள் அடுக்குகளாய் இருந்ததை அப்புறப் படுத்தினேன். அவளது மெல்லிய உடலை அதில் இழுத்துக் கிடத்தினேன். மேலே ஒரு போர்வையை எடுத்து சோபா முழுவதும் மறைத்து விட்டு தண்ணீர் குடிக்கலாம் என எழுந்தபோது வெளியில் போலீஸ் சைரனின் ஒலி. வேறு எங்கோ போவார். இங்கு வர என்ன முகாந்திரம் இருக்கிறது என எனக்கு நானே சமாதானம் சொல்லி தண்ணீரைக் குடித்தேன். பாட்டிலின் மூடியை மீளத் திருகி மூடும்போது வெளிக் கதவு தட்டப்பட்டு, ”கதவைத் திற போலீஸ்”.எனும் அதிகாரக் குரல் மிரட்டியது.

ஆஹா, வரட்டுமே, என்ன செய்ய முடியும் என்னை?. பின் மண்டையில் டிக் டிக் ஓசை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஏதோ அலறிய சப்தம் வந்ததாக அடுத்த வீட்டார் போன் செய்தனராம் அதனால், அதனை சரிபார்க்க வந்தோம் என வந்த அதிகார் கூறி விட்டு, உள்ளே வரலாமா எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். அலறிய சப்தமா? எப்போது கேட்டது? எனக்குப் புரியவில்லை. பின் மண்டை ஒலி டிக் டிக் என ரீங்கரிப்பது எனக்கு வெளியிலேயே கேட்க ஆரம்பித்தது.

சகஜ பாவனையில், நான் யார், என் வேலை என்ன என என்னை அதிகமாய் மதிக்கும்படி கூறியதில், “தொந்தரவுக்கு மன்னிக்கவும்” எனக் கூறிய அவர் இதோ கிளம்பி விடுவார் என நினைத்து அவரது நிதானமான ஒவ்வொரு கேள்விக்கும் மிக நிதானமாய் பதில் கூறிக் கொண்டு இருக்கிறேன்.ஆயினும் பின் மண்டையில், நீலமணிக் கண்கள், நீலமணிக் கண்கள் என என அதிக ஆங்காரமாய் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. நான் இந்த ஏரியாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது எனக் கூறி முடிக்கையில், பத்து எனச் சொல்லும்பொது நீலமணி என மிக அதிக ஒலியுடன் பின் மண்டையில் ஒலி கேட்டது. ஐயய்யோ, அவருக்கும் கேட்டிருக்குமோ என நான் மருண்டு அவரைப் பர்ர்க்க, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்த அவர் என் கண்களையும் என் காதுகளையும் ஆராய்வதுபோல் நோட்டம் விடுவதைக் கண்டு விட்டேன். இனியும் மறைப்பதில் பயனில்லை.

“ஒக்கே, நா, நான்தான் அவளைக் கொன்றேன்” என நான் திடீரெனக் கூறியதாக நினைத்தவர் நம்ப இயலாம எழுந்து விட்டார். நானும் ”நீஈஈஈஈஈஈஈலலலலலலலம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமமமம்ணிக் கண்கள்” எனும் ஓசை என மண்டையை பிளக்கும் முன் சோபாவை மூடியிருந்த அந்த போர்வையை விலக்கி, அவளது கைகளை பிடித்து வெளியில் இழுத்துப் போட்டேன். அப்போதும் அந்தக் கண்கள் என் மீது வெறுப்பை உமிழும் வகையில் என்னை நோக்கி வெறித்தன.

எழுதியவர் : தா.ஜோ. ஜூலியஸ் (1-Sep-14, 3:56 pm)
பார்வை : 184

மேலே