வாடைக் காற்று - மழை பாழ்
எதையாவது ஒன்றை பற்றிக்கொள்ளவேண்டும் என்ற போதெல்லாம் சமயங்களில் காபி கூட சூடாகப் பதில் தருவதுண்டு..ஒரு யோசனை எப்போதெல்லாம் ஒரு ஸ்பரிசம் தேடப்படுகிறதோ அப்போதெல்லாம் செல்லாத(உதவாத) திரையரங்குள் சிவந்த பல்புகள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு கூடுமானவரை போராடி பாதியில் நின்று திணறும் திரையை உற்று நோக்குவதான இருட்டின் பிம்பம் இருக்கையிட்டு இருப்பதாய்....
அன்றொரு தினம் தரையெங்கும் முட்களை மட்டுமே சிதறிக்கொண்டு எல்லா ரோஜாக்களும் ஒரே மேடையில் வண்ணக் காகிதங்களாய் பூத்தன.அப்போது அவன் எனக்கு நியாபகமே இல்லை.அவனது கைகளில் பழுத்த காயொன்று மட்டும் இருந்தது.தனியாகப் பேசுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு பெரிய இழவும் அதுதான்.....ஒரே ஒரு கற்பனையைத் தரையிறக்கிப் பார்த்தாலும் பார்த்தது தான் ஒழுகும் தீவிற்கு கூரையிடுவதாய் இருக்கிறது . இன்னும் எத்தனை தூரம் மௌனம் சாதிப்பதோ இந்த மிதக்கும் படகைக்கொண்டு.....துடுப்பிற்கு பதிலாய் அவனைப் பின்தொடரும் நினைவுகளைக் கூராக்கி செல்வதற்கு இந்த வலிவு போதவில்லை....ஆழம் அதிகம் , அழுத்தம் அசாதாரணம் ...நாளைய பயணம் அல்லவோ..துருத்தித் துருத்தி முடியப்பட்ட கந்தைத் துணியில் வரிந்து பிரிந்த நூல்த் திரள்களை எண்ணிக்கொண்டு சில பொத்தல்கள் எனது கனவுகளை விசிறியடித்தபடியே மூச்சுப் பிடிக்கும் முதுகு பாரத்தை இறக்கிவைப்பதாக ஒரு நாடகம்....எனது பெரும்பங்கு வேஷத்தை நானே தான் ரசித்தேன்.மறைமுகப் பின்னடைவில் அந்த அதிர்வில்லாத முகம் மட்டும் ஓரமாகக் கிடந்தது....நான் கிழிக்காத முகமும் அதுதான்....
ஒரு ஜீவனையும் சமாதியையும் எதற்கு அடைத்து வைக்க வேண்டும் ….இங்கே திறந்து தான் வைத்திருக்கப்படுகிறது.அனுமதிக்கு ஆதாரமே இல்லை....கண்ணாடி முன் வெற்றுக் கண்களை சில சமயங்களில் கசக்கிப் பார்த்துக் கொள்வதுண்டு.அப்போதேனும் எனது கண்கள் திறக்கப்படுமா என்றுமாவதாகக் கூட இருக்கலாம்.அறியாமையோ அறிவின்மையோ என்பதில் தொடங்கி இறுதியில் எந்தக் கட்சியிலும் சேரும் என்பதற்கு முதலிலே முற்றுப் புள்ளி வைத்துத் தான் தொடங்குகிறது எல்லாத் தொடக்கங்களும்.....அவனை ஆராய்வதாக மனம் கலகப்படுகிறது.இப்போதும் திருத்த முடியாத ஒரு விதியை மையமாக வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுக்கும் இயக்குனரை ஆதரித்துப் போவதாகத் தான் இருக்கிறது.
எனது திசையில் மட்டும் அந்த மனிதனின் பார்வை விழவே கூடாது.இருவருக்கும் இடையேயான பொம்மைப் பாலத்தை உடைத்ததாக காதலைத் தான் விலங்கு பிணைப்போம்.ஒரு கண் , ஒரு காது ,வாய் மட்டும் இரண்டாக தனது சுயத்தைத் தோலுரிக்கும் பரிணாமப் பித்துக்குளிகளை விழுங்கிக்கொண்டே பூதமாகின்றது செதில்கள் செருகிக் கொண்ட நெடிய மூச்சு.அவன் முன்னேறிக் கொண்டே இருக்கட்டும்.திரும்பவே வேண்டாம். அவன் மிகப் பெரிய முட்டாள்.நான் கண் கெட்டவள்.இந்த ஜோடியில் பொருத்தம் பார்க்கப் போவதாக நாளைய பயணத்திற்கான நாள் நெருங்கிக்கொண்டே இருக்கும்.இரவைப் பழுதாக்கி விட்டு ஓய்வில் பிறையை வளர்த்துக் கொண்டிருந்தது எனது அதிர்ஷ்டம்.பாதைக்கு வேகம் மட்டும் தடையே இல்லை.....குளிர்ந்த கதிர்களில் அவனது முகம் உறை படிமமாக..... தோற்றது சிலந்தி......