மனிதன் இருக்கின்றானா - மணியன் கேட்கிறான்
சன்னிதானக் கதவுகள்
சாத்தியிருக்கும் வேளை
கடவுளைக் காண
கருவறை தேடுகிறான் . . . .
அற்ப விசயங்களை
அசை போடும் மனிதன்
அரிய விசயங்களை
அளவளாவுவதே இல்லை . . .
குறைவான நீர் இருக்கும்
குடத்தினைத் திறந்து
குறை கூறியேனும்
குடிக்கத்தான் முயல்கிறான் . . .
நிறைவான பொருள்களின்
நிதர்சனம் அறியாமல்
நெஞ்சம் நிமிர்த்தி
நாத்திகம் பேசுகிறான் . . .
அன்பே கடவுள்
அன்பே சிவமெனில்
அஃதில்லா அரக்கன்
ஆவியில்லா சவம்தானே . . .
குதர்க்கம் பேசிக்
குதறிக் கிழிக்கையில்
கூறுபோடப் படுவது
கூட்டாளிக் கூடுகளே . . .
மனிதனின் செயல்தனில்
மதம் பிரித்துப் பார்த்தால்
மிஞ்சி நிற்பது
மலத்தை விட நாறுமே . . . .
எடுப்பதும் பறிப்பதும்
படுப்பதும் புரள்வதும்
பதுங்குவதும் பாய்வதும்
பாவமிந்த மனிதமும் கொண்டதே . . .
எஞ்சி நிற்கும் இரவுகளில்
விஞ்சி நிற்கும் நடத்தைகள்
கெஞ்சிக் கேட்பவனையும்
வஞ்சிக்கும் வக்கிரங்கள் . . .
நடை உடை பாவனை
நாலாவதாய் பித்தலாட்டம்
நாலும் உள்ளவன்தான்
நானிலத்தில் மனிதன் ஆனான் . . .
விதி என்று எண்ணி
வீழ்ந்து கிடக்கும்
வீணர்களின் பகற்கனவு
வீதியில்தான் அவனை நிறுத்தும் . . .
மதி கொண்டு விதி வெல்லும்
மனதும் இனி பெற்றுவிடின்
மலையுமினி மண்ணாய்த் தோன்ற
மனம் முழுதும் இன்பம் சுரக்கும் . . . . .
*=*=*=*=* *=*=*=* 6=*=*=*