நகரத்தில் நுழைந்துவிட்ட ஒரு பட்டாம்பூச்சி
நகரத்தில்
நுழைந்துவிட்ட
ஒரு பட்டாம்பூச்சி
பாதை மாறி வந்துவிட்ட
பதற்றத்தில்
இங்குமங்கும் அலைகிறது !
பட்டாம்பூச்சி
ரசிப்பவர்களான
குழந்தைகள் யாவரும்
பள்ளிகளில்
அடைபட்டுக்கிடக்க
பட்டாம்பூச்சியைத் தமது
எண்ணங்களில்
தொலைத்துவிட்டவர்களால்
நிரம்பிக் கிடக்கிறது
நகரம் !
ஒரு
தேநீர்க்கடையின்
மேற்கூரையில்
அமர்ந்த பட்டாம்பூச்சி
ஆஸ்பெஸ்டாஸ்
சூடு தாங்காமல்
களைப்பைச் சுமந்துகொண்டு
இன்னும் பறக்கிறது
தான்
சற்றே இளைப்பாற
ஒரு மரத்தையாவது
குறைந்தபட்சம்
ஒரு செடியையாவது
கண்டுபிடித்துவிடும்
எத்தனங்களுடன் !
ஆனால்
விர்ரென்று
தன்னைக் கடந்த
ஒரு வாகனத்தின்
காற்றதிர்வில்
இறகுதிர்ந்து
நிலைகுலைந்து
சாலையில் வீழ்ந்து
துடிதுடித்து
அந்தப் பட்டாம்பூச்சி .................
மறுநாள்,
தனது நாளிதழில்
இந்தச் செய்தியை
ஆழ்ந்த கவலையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறார்
கடவுள் !
=========================
- குருச்சந்திரன்