ஆசிரியர் என்பவர்

நிலவை காட்டி குழந்தைக்கு
சோறு ஊட்டுபவள் அன்னை...
நிலவை காட்டி குழந்தைக்கு
கதை சொல்பவர் தந்தை...
அதே நிலவினை காட்டி
வளர்வதும் தேய்வதும் தான்
வாழ்க்கை அதில்
இன்பமும் துன்பமும் சரிசமம்
வெற்றியும் தோல்வியும் சமநிகரென்று
வாழ்க்கை பாடம் நடத்துபவர் தான்ஆசான்!...

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்து
குற்றங்களை தடுப்பதில் காவலர்களாகவும்...
சிறு சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும்
சமாதனம் செய்து நீதி வழங்குவதில் நீதிபதிகளாகவும்...
மன குழப்பங்களை அறிந்து, தெளிவு பெற
ஆலோசனை வழங்குவதில் மன நல மருத்துவர்களாகவும்...
வரலாற்றை சொல்லி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி
நாட்டுபற்றை வளர்ப்பதில் நற்குடிமக்களாகவும்
இத்தனை பண்முகத்தோடு மட்டுமல்லாது
களைப்பை போக்க கதைகள் சொல்லியும்
பாடத்தின் கடின பகுதியை விளையாட்டு காட்டியும்
படிக்க வைக்க படாத பாடுபடும்
ஆசிரியர்களாக அவதரித்திருக்கும் உங்களை
கலியுக கடவுள்கள் என்றே அழைக்கலாம்...


மாணவர்கள் வைக்கும் பட்டபெயர் மனக்கசப்பை தந்தாலும்
சமூகம் வைத்த பயந்தாங்கொள்ளிகள் என்ற பெயர்
அடிமனதை சுட்டாலும் சில முட்டாள்களின்
கேலிகளும் கிண்டல்களும் காதுபடவே கேட்டாலும்
கரும்பலகையில் எழுதும் போது கல் வந்து பட்டாலும்
கழிவறைகளில் கண்டவரோடு இணைத்து எழுதி வைத்தாலும்
அவமானம் வேதனை என அனைத்தையும் கடந்து
நாளைய உலகிற்கு புதிய மனிதர்களை
உருவாக்கும் உன்னத பணியை செய்யும்
உங்களை என்ன சொல்லி போற்றுவது..

பலரை முன்னேற்றும் படிகளாய்
பக்குவமாய் செதுக்கும் உளிகளாய்
பண்பாட்டை காக்கும் விழிகளாய்
பகுத்தறிவை ஊட்டும் கரங்களாய்


சாதிகள் கடந்து சமயங்கள் கடந்து
மொழி, இனம் என்பதை தாண்டி
மாணவர்களின் உள்ளத்தில்
அறிவென்னும் அகல் விளக்கேற்ற
தன்னையே எண்ணெய்யாக்கும்
சமத்துவ வள்ளல்கள் தானே வாத்தியார்கள்...

பதக்கங்களை எதிர்பார்த்து பாடங்களை எடுப்பதில்லை
பாராட்டுகளை எதிர்பார்த்து பாரபட்சம் பார்ப்பதில்லை
விருதுகளுக்கு விழிகள் நனைவதில்லை
புகழுரைகளுக்கு புலங்காகிதம் அடைவதும் இல்லை
பணி நிறைவில் மன நிறைவு தருவது எதுவெனில்
தன்னிடம் பயின்றவர் பட்டங்களையும்
பாராட்டையும் பதக்கங்களையும் குவிக்கும் போது
என் மாணவன் என்று சொல்லி பெருமைகொள்ளும்
ஒற்றை சொல் தான்!..
அது தான் அவர்களின்
உழைப்பிற்கு ஊதியம்!
சேவைக்கு பெருமை!
விருதின் சிகரம்!


எல்லா மூங்கில்களையும் புல்லாங்குழலாக்க போராடும்
லட்சியவாதிகளே! சற்று நில்லுங்கள்.
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழலானால்
கூரைகளுக்கு என்ன செய்வது ?
கூடைகளுக்கு எங்கு செல்வது?
பிரம்புக்கு என்ன செய்வது?
கைத்தடிக்கு எங்கு செல்வது ?
தரம் அறிந்து திறம் தெரிந்து
பல்துறைகளுக்கு தகுதியுடையவர்களாக
மாற்றுங்கள் மாணவர்களை…
நாளைய இந்தியா உங்கள் கைகளில்…

எழுதியவர் : (3-Sep-14, 4:40 pm)
Tanglish : aasiriyar enbavar
பார்வை : 277

மேலே