சொர்க்கமாய் விளங்கும் பாரதம்
04-09-2014
புத்தம் புதிய பாரதம் -இது
புதுமைகள் நோக்கிய பாரதம்!
சித்தம் அழகிய பாரதம்! -இது
செயல்களை நோக்கிய பாரதம்!
உழுதவர் பலன்கள் அறுக்க -இனி
ஓங்கும் வழிகாண் பாரதம்!-
தொழுதடி மைசெயும் வேலையாய் -எண்ணாத்
தொண்டர்கள் நிறையும் பாரதம்!
எழுதரும் கொடுமை பெண்களும் -இனி
எங்குமே காணாப் பாரதம்!
முழுதாம் இந்திய வளங்களில் -மக்கள்
முன்னுரி மைவளர் பாரதம்!
குடிமகன் முன்செயும் வாக்குகள் -இனிக்
குறையாச் செயலுறும் பாரதம்!
மிடியற லஞ்சம் ஒழிந்திட -எங்கும்
மேன்மைகள் தோன்றிடும் பாரதம்!
வீட்டினை நினைப்பவர் வாழினும் -நாட்டை
விற்பவர் வளராப் பாரதம்!
நாட்டதன் உயர்வை நினைத்தவர் -பல
நன்மைகள் செய்வோர் பாரதம்!
வருந்து,நம் மாதரும் மகிழவே -விலை
வாசிகள் அடங்கிடும் பாரதம்!
சுருங்குவர் வெளி,நா டேகுவர் -இனிச்
சொர்க்கமாய் விளங்கும் பாரதம்!
====