ஆசிரியர் தினம் - விவேக்பாரதி

இன்று ஆசிரியர் தினத்தை யொட்டி எங்கள் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட உள்ளனர். அதில் இன்று காலை சுமார் பத்து மணி அளவில் நான் வாசிக்கப் போகும் ஆசிரியர் தினக் கவிதை, இதோ உங்கள் பார்வைக்கும் கருத்திற்கும்.
வானுக்குள் வாழ்ந்தது அலுத்துப் போய் - ஆயிரம்
கோயிலில் வாழ்ந்தது புளித்துப் போய் - துரும்புத்
தூணுக்குள் வாழ்த்து சலித்துப் போய் - ஆசிரியர்
உருவத்தில் வந்தானோ இறைவன் இன்று ?
நான்
கல்வியில் ஒருபங்கு எண்ணம் வைத்து - கவிதை
சொல்வதில் பெரும்பங்கு ஆர்வம் கொண்டான் - நான்
சொல்வது எல்லாம் எனை வளர்த்த - உலகில்
நல்லவர் வாழ்கவெனும் அரும்பட்டு ஒன்று !
எப்போதும் போலெனக்கு பரிசு எல்லாம் - நீங்கள்
தப்பாமல் தருகின்ற கைதட்டல் தான் - ஆனால்
இப்போது அதுமட்டும் போதாது பாரீர் - உணர்ந்த
*மெய்தட்டல் தேடியே பாடி வந்தேன் !
பதிலுதவி வேண்டிடா
ஆசிரியர்கள் இங்கே
மழையைத் தருகின்ற
மேகம் !
விவேகம் பொருந்திய
அவர்களால் நமக்குக்
கிடைக்கும் *வியின்
வேகம் !
இன்டர்நெட் கடலில்
தகவல் மீன்களை
பிடிக்கும் அவர்கள்
மீனவர்கள் !
மாணவர் நமக்கு
வாழ்வின் ஓட்டம்
போதிக்கின்ற
மானவர்கள்!
நாற்றிசைச் சேதி
நன்மையின் மீதி
சொல்லித் தருகின்ற
*வானவர்கள் !
விண்மீன் நாமும்
நீந்தத் தாங்கும்
பரந்து விரிந்த
வானவர்கள் !
செந்தமிழ் பட்டு
கணிதத்தின் கூட்டு
நமக்குச் சொல்லும்
புலவர்கள் தான் !
நம்மன வயலில்
நல்லதின் விதையை
தூவி வளர்கின்ற
உழவர்கள் தான் !
கல்வியின் மேன்மை
நல்லவர் கேண்மை
வளரச் செதுக்கும்
சிற்பிகள் தான் !
சிரித்திட வேண்டாம்
அறிவின் இனிப்பை
நமக்குத் தருகின்ற
பர்பிகள் தான் !
பாட்டாய்ப் பாடம்
கற்றுத் தருகின்ற
ஆசிரியர்கள்
ஐ போன்கள் !
ஒன்றா இரண்டா
எத்தனை யுண்டு
அவர்களுக்குள்ளே
ஐ ட்யூன்கள் !
கணினி மனதை
அறிவால் நித்தம்
ப்ரோக்ராம் செய்யும்
பொறியாளர் !
தப்புகள் வந்தால்
அடித்துத் திருத்திக்
கட் எடிட் செய்யும்
சரியாளர் !
கல்வியின் ஈர்ப்பை
மாணவர் மேலே
கண்டு பிடிக்கும்
ந்யூட்டன்கள் !
அவர்கள் தானே
வாழ்வெனும் வீட்டில்
கண்கவர் மலர்களின்
தோட்டங்கள் !
ஆசிரியர்கள் ,
அறிவுக் குட்டையின் தேக்கம்
அன்பின் மறுஉரு வாக்கம்
கல்விக் கடல்நீந்தும் பக்கம்
அவர்கள் தருவதுஎல்லாம் ஊக்கம்
உலகில் உதிராப் பூக்கள்
நற்பண்பே அவர்சொலும் பாக்கள்
நாமவரை மொய்க்கும் ஈக்கள்
நன்னெறியே அவர்மனுத் தாக்கல் !
ஆசிரியர்களை நேசியுங்கள்
அவர் *மேதா விலாசத்தை வாசியுங்கள்
அவரால் கல்வியை சுவாசியுங்கள்
அவர் அறிவின் வள்ளல் ! யாசியுங்கள்
அவர் பதமலர் பணிந்து பூசியுங்கள் !
பிறகென்ன என்னக்கு கைதட்டுவது
பற்றி கொஞ்சம் யோசியுங்கள் !
-விவேக்பாரதி
________________________________________________________________________________________________
*மெய்தட்டல் = கவிதையை உணர்ந்ததன் உண்மையான கைதட்டல்
*வி = பறவை
*வானவர்கள் = தேவர்கள்
*மேதா விலாசம் = மூளை