காதலும் கல்லறையும்

( இறந்த காதலியின் கல்லறையைத் தழுவிக்கொண்டே காதலன் புலம்பியழும் வலிகளே இக்கவிதையில்...)


என்னவளே!
உன்னை உலக அதிசயம்
என்று சொல்லி ஜடப்பொருளாய்
ஆக்கிவிட முடியாது
நீ
உயிர்களின் அதிசயம்
பூவுக்குள் உயிர் பெற்ற
பிரபஞ்சத்தின் ரகசியம்!

உன் ஒருத்திக்காக மட்டும்தான்
காதல் தராசில் நான்
என்னையே நிறுத்தி
எடையிட்டு கொடுத்தேன்!

மனச்சிறையை உடைத்து
மத்தாப்பு கொளுத்தினாய்
மகிழ்ந்துவிட்டேன்
காதல் தீபாவளியை என்
கைகளில் தந்துவிட்டாயென்று
ஆனால்
வெடித்த பிறகுதான்
தெரிந்தது அதில்
சரவெடியாய் இருந்தது உன்
உயிரே என்று...

ஒரு மாறுதலுக்காக
உன்னை கண்ணீர் என்று
வர்ணித்தேன்
அதுதான் இன்று
உண்மையாகிவிட்டது - ஏனெனில்
உன்னை ஒவ்வொரு முறை
பார்க்க நினைத்தாலும்
நான் அழவேண்டி இருக்கிறது...

காதலியே!
நான் பேசினேன்
உடல் புல்லரிக்கிறது என்றாய்
இடையில் எமன் பேசிவிட்டானே
அதனால்தான் உன்னுடல் செல்லரிக்கிறதா?

என்னை சுவாசித்தவளே
உனக்காக நான் சேமித்தது
காதலையும் கண்ணீரையும் மட்டுமே...
உனக்கு பசித்தால்
புசித்துக்கொள் என் காதலை
தாகமெடுத்தால்
குடித்துக்கொள் என் கண்ணீரை

காதலும் மரணமும்
ஒரே கருவில் உயிர்த்தெழுந்த
இரட்டைக் குழந்தைகளா?
ஏன் ஒன்றை அழைத்தால்
மற்றொன்றும் வந்துவிடுகிறது?

நாம் சந்தித்த இடங்களிலெல்லாம்
தாஜ்மகால் கட்டுகிறேன்
அனால்
உன் கல்லறை மீது மட்டும்
ஒரு தாஜ்மகால் கட்டமாட்டேன்
ஏனெனில்
உன்னை சுமக்க வைத்துவிட்டு
என்னால் சுகமாய் இருக்க முடியுமா?

சகியே!
என்னால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?
உன் செம்பருத்தி தேகத்தில் - இன்று
செல்லரிக்கிறதே...
நான் கட்டியணைத்த இடமெல்லாம்
கரையான்கள் தொட்டுத் துளைக்கிறதே...

முடியவில்லை
உன்னை இழந்து உயிரோடு வாழ்வதற்கு...
உன் கனவுகளே
என்னைக் கொன்று குவிக்கிறது...
உன் நினைவுகளே
என்னைத் தின்று செரிக்கிறது...

இங்கு
எது வேண்டுமானாலும் நடக்கட்டும்

என் உயிருக்குள் பூகம்பம் ஏற்பட்டு
உடல் முழுவதும் பரவட்டும்
அரை நிமிடத்தில் உன் ஆயுள் முடியப் போகிறதென்று
அசரீரி வந்து என் காதில் சொல்லட்டும்

புயல் வீசி ஒரு நொடியில்
பூமியையே புரட்டிப்போடட்டும்

பூமா தேவியே மனித வெடிகுண்டாய் மாறி
பூமியைச் சிதறடிக்கட்டும்
ஆனால்........
உன் கல்லறையைத்
தழுவிக் கொண்டிருக்கும் என் கைகள் மட்டும்
தளர்ந்து விடாது...

உன் கல்லறையை முத்தமிட்டே
தேய்ந்து போகத் துடிக்கும்
என் இதழ்கள் மட்டும்
ஓய்ந்து விடாது....

இதற்கு
முடிவென்பதும் கிடையாது.............

எழுதியவர் : ஜின்னா (6-Sep-14, 1:57 pm)
பார்வை : 686

மேலே