சிறகு முளைத்த பட்டாம்பூச்சிகள்

என் இனிய பள்ளிப் பருவம் !!
அதிகாலை 5 மணி கோழிக் கூவ ! குயில்கள் இனிய கீதம் பாட! காகங்கள் கரைய!
கருவண்டுகள் ரீங்காரம் ஓசையிட! வீட்டில் வளர்க்கும் பூனை காலிடை நடக்க!
ஆட்டுக்குட்டிகள் துள்ளிவர! அன்னையவள் எழுவாள்! அமுத பாலினை கறக்க.
எனக்கோ வயது 8 .நானும் அவளோடு உடன் எழுந்து அவள் செல்லும் இடம் எல்லாம் உடன் செல்வேன்.
பாலினைக் கறக்க ஆரம்பித்தவள் 6.30 மணிவரை கரப்பால்! 8 மணிக்கு பால்வண்டி வரும் வீட்டிற்கு அல்ல .
பால் சேகரிப்பு மையத்திற்கு! வீட்டிற்கு தேவையானது போக ஒரு 4(or )5லிட்டர் பாலை என்னிடம் கொடுத்து அனுப்புவாள். நானும் கொஞ்சம் விளையாடி ,தூக்கமுடியாமல் திணறி எப்படியோ கொண்டு சேர்ப்பேன்!
ஒரு 2மையில் தூரம் கடந்து! பால்வண்டி 8மணி என்பது 8.30 ஆகும். அது வருவதற்கு . அதனால் நான் தப்பித்து விடுவேன் என் அம்மாவிடம் !
பிறகு வேறு யாராவது பாலைக் கொண்டு செல்வர். அப்போது என் வேலை கம்புக் காட்டிற்கு ட்ரம் அடிப்பது. பச்சை கிளிகள் கம்புக் கதிரை உண்ணாமல் இருக்க அவை வரும் நேரம் சரியாக காலை 5 மணி முதலே தன் வேலையை ஆரம்பிக்கும். எனவே என் அன்னை என்னிடம் ஒரு ட்ரம்மைக் கொடுத்து ஒலிஎழுப்ப கூறுவாள்! நானும் அடிப்பேன் அடிப்பேன் 8.30 மணிவரை. பள்ளி தொடங்கும் நேரம் 9.30.
என் பள்ளியின் தூரம் 2 கிலோமீட்டர் தொலைவு.
கிளியை விரட்டிவிட்டு கிளம்புவேன் 9 மணிக்குள். அதற்குள் அக்கம்பக்கத்து வீட்டு பிள்ளைகளும்
என்னுடன் இணைந்து கொள்வர் . அனைவரும் இணைந்து கூச்சலும் கும்மாளமுமாக சுமார் 7,8 பேர் செல்வோம். வழியில் பேசி, சண்டையிட்டு ,உதவி செய்து என எல்லாம் நடக்கும்.
பள்ளி நேரம் நெருங்குவதை சூரியனைப் பார்த்து அறிந்தாலே தெரியும். சிட்டாய் பறப்போம் .
எங்கள் 3-ம் வகுப்பு ஆசிரியரின் அடிக்கு பயந்து போய்!
சிறுகப் படித்தாலும் அத்தனையும் மனன இராகம் தான். பள்ளி இடைவேளை விட்டால் போதும் ,
பள்ளியருகே இருக்கும் பிள்ளைகளின் வீட்டில் உள்ள கம்மன்சோறு மோரு எல்லாம் காலி. கடையில் கிடைக்கும் தேன்மிட்டாய், சவ்மிட்டாய், இலந்தவடை என அனைத்தையும் ஒரு கை பார்த்து விடுவோம் .
மதியம் சத்துணவு அமிர்தமோ அமிர்தம். இடையிடையே விளையாட்டு, வாழ்க்கைக் கல்வி ,சுற்றுச் சூழல் பராமரிப்பு என கல்வியை நிஜ அனுபவமாக கற்றோம். 4 மணிக்கு பள்ளி முடியும். பின் அனைவரும் இணைவோம். ஆசிரியர் பள்ளியில் கற்றுக் கொடுத்ததை மாறி மாறி ஒப்பித்துக் கொண்டே நடப்போம் . வழியில் கடலைக் காட்டை கண்டால் போதும் கொய்து விடுவோம். அதன்பின் கொய்யா ,நெல்லிக்காய் , மாங்காய், புளியான்காய, கரும்பு, கிழங்கு ,நுனப்பலம், என ஒன்றும் எங்கள் கை படாமல் இருக்க முடியாது. மழைக் காலங்களில் சேற்றில் அவதிப் பட்டாலும் வெல்வெட் பூச்சி ,தும்பி, பட்டாம்பூச்சி என ஒவ்வொன்றையும் பிடிப்பதில் கவனமாகி சிரமமும் சுகமானது ! ஆனால் இன்று ?.........

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (7-Sep-14, 9:54 am)
பார்வை : 149

மேலே