பாரதியே பாரதியே

சத்தியமாய் உன்போலே சாத்தியமே இல்லையடா
சத்திசத்தி என்றேநீ கத்திகத்தி- சித்தசுத்தி
கொண்டு கவிபடைத்தாய் கூத்தாடும் நாங்களெலாம்
தெண்டக் கவிதான்செய் தோம் .
படைத்த இறைவனைப் பாடினாய் உள்ளம்
உடைத்த வறுமையை மூடி- கிடைத்த
பொழுதெல்லாம் பொன்னாக்கி புத்தாக்கம் செய்தாய்
அழுதிடவே வைத்தோம் உனை.
உனைநினையா உள்ளம் உனைநினையா எண்ணம்
முனைமழுங்கி போகும் முழுக்க- நினைவிலுனை
வைத்தே கவிபாடும் வக்கற்றோர் எங்களையும்
கைத்தூக்கி விட்டவன் நீ!
நீங்கா புகழுனது நீயுண்ணும் சோற்றினையும்
ஏங்கும் சிறுபறவைக் கீந்தாயே -தூங்கிவிழும்
நாங்களெங்கே? தூயவனே! நாடுயரப் பாடிவைத்த
வேங்கையுன் வீரமுமெங் கே!