ஊசலாடிய தொங்கு பாலம்

இத்தனை காலத்துக்குப் பின்
எதிர் பாராமல்
சந்தித்துக் கொண்டோம்....
ஒருமை தவிர்த்து,
பன்மையும் தவிர்த்து
ஏதோ ஒரு "ங்க" வில்
ஆரம்பித்து
எதை எதையோ
பேசினோம்....
துளி கூட
எங்கள் காதல்
அங்கு
இல்லாமல்
கவனமாக
பார்த்துக் கொண்டோம்.....
கடக்க முடியாத
தொங்கு பாலம் ஒன்று
ஊசலாடிய இடைவெளியில்
புன்னகைத்தபடியே
கடந்து சென்றோம்....
மனதுக்குள், மின்னல்
அடித்த கணமொன்றில்
வலது பக்கமாய்
வகிடு எடுத்து
தலை வாரியிருந்தாள்
இன்னும்....
என்ற யோசனையில்
சட்டென திரும்பினேன்...
அவள் ஏற்கனவே
திரும்பித்தான் இருந்தாள்....
அவளுக்கும் அவளுக்கு
பிடித்த
என் தாடி
இன்னும் அப்படியே
தாடியாகவே இருக்கிறது என்று
அடித்திருக்க வேண்டும்
ஒரு மின்னல்...
அதற்கு பிறகு
பொய்யாகக் கூட
எங்களால்
புன்னகைக்க முடியவில்லை
அவரவர் வழியிலும்.........
கவிஜி