பிரிவென்னும் மரணம்

காலையில் கதிரவன் பூக்கின்ற நேரந்தொட்டு
இரவின் மடியினில் கண்கள் மயங்கும் வரை
காதலின் நினைவின்றி வேறில்லை என்றாலும்
துயிலும் பொழுதும் அகலா நினைவுகள்
அல்லல் படுத்தும் ஒவ்வொரு நாளும்...!
பாராத நொடிகளும்
பேசாத நிமிடமும்
உறவாடளில்லாத சிற்சில சமயமும்
ஓடா மண் குதிரைபோல்
யுக யுகங்களாய்க் கழியும்...!
மனதில் காதல் இருந்திடும்போது
கோபங்கள் தாபங்கள் என்பதும் ஏது?
சகலமும் பொறுக்கும்
தன்மையாய் இருக்கும்
ஆழி பேரலையாய் அன்புதான் காட்டும்...!
சிறுசிறு செய்கைகள் செய்தாலும் கூட
ரசனையாய் இனிக்கும் ரசித்திட தோன்றும்
சிறுகீறல் உரசல்கள் தெரியாமல் படினும்
மண்ணுடல் மேனி உணர்ச்சியில் சிலிர்க்கும்
விண்ணில் பறந்து மனம் வானில் உலாவும் ...!
இத்தனை சுகங்கள் காதலில் வைத்தாய்
என்றாலும் இறைவா பிரிவை ஏன் படைத்தாய் ?
கண் குளம் வறண்டு தன்னிலை மறந்து
தேடல்கள் தொடர்ந்திட உணர்வுகளின்றி
நடை பிணமாக வாழ்ந்திடும் வாழ்க்கையும்
பிரிவென்னும் மரணம் தருவதுதானே ...!