நில்லா மனம்

வெண் காகிதத்திலோவியம்
தீட்டுகையில் கூட
கடிவாளம் அறுத்தெறிந்து
துணையற்ற காட்டுப்புரவியின்
வெறி கொண்டு
தறிகெட்டுக் கனைத்துக்
கர்ஜிக்கிற மனதினை
எந்த லயத்திலடைக்க ?

பகீரதப் பிரயத்தனத்தின்
கட்டுப் பாட்டுச் சங்கிலியை
மதங்கொண்ட
ஒற்றைக் களிறாய்
பிய்த்தெறிந்து பிளிறுகிற
மனதை
எந்த கும்கியால் கட்டுப்படுத்த ?

பேணப் படாத
சிதில ஆலயத்தின்
அடர் இருள் கருவறையின்
கரிய வௌவாலாய்
நித்தமும் படபடத்து
கிரீச்சிட்டுச் சுற்றுகிற
மனதினை
எப்படி கட்டுப்படுத்த ?

ஆழ் கடல் தியானத்தின்
அடியாழத்திலும்
ருத்ர காளியாய்
செங்குருதி நாதுருத்தி
கொடுஞ் சூலாயுதமேந்தி
குதறக் குறிபார்க்கிற
மனதை
எந்த ஜெபத்தினால்
ஆற்றுப்படுத்த ?

எழுதியவர் : baalaa (13-Sep-14, 9:26 pm)
பார்வை : 134

மேலே