வாப்பா நீ மீண்டு வாப்பா

நீங்க எண்ணையில முத்தெடுக்க அங்கு
நாங்க இரு உசிரு தத்தளிக்க இங்கு
தனிமைப் புண் மனம் வருத்த-எங்களை
தவிக்க விட்டு அழுதபடி
புறப் பட்டுப் போன வாப்பா
திசை திரும்பி ஊர் வாற
திகதி எப்ப சொல்லுங்க
வாப்பா நீ மீண்டு வா ப்பா

என் பிஞ்சு முகம் நேர்காண
உன் நெஞ்சு தவிக்கலியா
என் புரியா மொழி கேட்க
உன் புலன்களுக்கு தோணலியா
வாப்பா நீ மீண்டு வா ப்பா

ஆண் துணைக்காய் வாழ்க்கைப்பட்ட
அன்னையவள் தினம் தவிக்க
தந்தையை இழந்த
தனையன் நான் துடிக்க
சிந்தையில் நீ ஏற்று
செயல் படுத்த மறுத்தபடி
பணம்,பணம் என்று
பந்தயக் குதிரையென
காசுக்காய் சுகமிழந்து
கடல் தாண்டி உழைக்கின்றாய்
போதும் நிறுத்தி
புறப்பட்டு வா வாப்பா
வாப்பா நீ மீண்டு வா ப்பா

“வைபரில்,ஸ்கைப்பில்”தினம்
வந்து நீ போனாலும்
நேரில் இருக்கின்ற
நிம்மதியை தருவாயா
சீவிக்க துணையின்றி-இரு
சீவன் தவிப்பதனை
எப்ப நினைப்பீங்க-என்னருகில்
என்றைக்கு நிலைப்பீங்க
வாப்பா நீ மீண்டு வா ப்பா

பிறந்தாறு மாதத்தில்-எனை
பிரிந்து நீங்க போனதென்று
உம்மா கதைப்பாங்க
உயிர் வருடி அணைப்பாங்க
கண்கள் பனிக்கும்
கதைத்த குரல் தழுதழுக்கும்
நானும் அருகிருந்து
நனைந்த விழி துடைத்து
ஆறாத் துயரை
அழுது தனிக்கின்றோம்
வாப்பா நீ மீண்டு வா ப்பா

பெருநாள் தினங்களிலே
பிரியமாய் உடுப்புடுத்து
பக்கத்து வீட்டு வாண்டு
பசங்களெல்லாம் விரல் பிடித்து
வாப்பாண்டு அழைத்தபடி
வலம்வாற காட்சிகண்டு
உசிரு அதிர்கிறது
உணர்வாயா அங்கிருந்து
வாப்பா நீ மீண்டு வா ப்பா

காசு,பணம் வாழ
கட்டாயம் தேவைதான்
அதற்காக உன் வாழ்வை
அடகு வைத்தாய் தியாகம் தான்
ஆனாலும் வாப்பா
அறியுங்கள் ஒன்றினை
உங்கள் துணையற்று
ஊரில் வாழ்வதனால்
நானும்,உம்மாவும்
நடைப் பிணமாய் வசிக்கின்ற
அநியாய பாவங்கள்
அழியாத சோகங்கள்
இந்த அவலம் இன்னும் தொடராமல்
இருக்க வேண்டுமெனில்
வாப்பா உடனே புறப்பட்டு
வாப்பா நீ மீண்டு வா ப்பா.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை

எழுதியவர் : (14-Sep-14, 2:38 pm)
பார்வை : 191

மேலே