கருத்திலே பூத்தது

கருத்திலே பூத்தது- 210474-சர்நா அவர்களின் கவிதை பார்க்க....


முக.நூல்
பலருடைய முகத்தை
வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நூல்!

சர்.நா சொல்லுவதுபோல்
பல சிறு வட்டங்களையும்
பெருவட்டங்களையும்
மாவட்டங்களாக்கும் நூல்தான்!
வெறுமையைக் கழிப்பதாகவும்
பொழுதைக் களிப்புள்ளதாகுவதாகவும்
உலாவரும்
வித்தைச் செயல்செய்யும் விநோத நூல்தான்!!

புறஞ்சொல்வதைப்
பின்னூட்டமாக
நாகரிகமாக்கியது இதுவல்லவோ?
நாசூக்காக நகர்வதை
'விரும்புகிறேன்' என்றெழுதி
விலக்கிச் செல்லவைத்த
முதல் நூலோ?

கண்ணளக்கும் தூரத்தைக்
காதளக்காது என்பதைக்
காட்டவந்த முதல் நூலோ?
சொல்ல வந்தவர்
சொல்ல வந்ததை
முழுதுமாய்ச் சொல்லிய பின்
பார்ப்பவர் படிப்பவர்
பேச இடம்கொடுத்துப்
பதற்றங்களை விலக்கிய
நூலும் இதுதானோ?

கிசுகிசுப்பிலுள்ள
சிறு சத்தமும்
கேட்கவிடாமல் பேசவைத்த நூலிது
'ஷேர்'-பகிரு மூலம்!

எந்த மொழியையும்
அளவோடு உபயோகிக்கக்
கற்றுக் கொடுப்பது;
கொஞ்சலாக இருக்குதோ இல்லையோ
நிச்சயம் அவை
கொஞ்சமாகவே இருக்கும்!

தொலைபேசிப் பேச்சுக்கள்
கொடுக்காத ஒரு திருப்தியைத்
தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே
கையாட்டிச் செல்பவர்கள்போல்
ஒரு 'விருப்ப'த்தோடு
நகர்ந்துவிட உதவுவது!

தூரத்திலேயே வைத்திருப்பதை
அவரறியாமல் இருக்க
அவ்வப்பொழுது அவரவர்
கனவில் வரும் முகம்போல்
மின்னலடித்துவிட்டுப் போக
உதவுவதும் இந்நூலே!

செய்திகளாகவே கொடுத்துப்
பாடங்களைப் புகட்டிச் செல்லும்
ஆசிரியனும் இதுவே!
அதனாலேயே இதற்கு
ஆசிரியர் நாளில்
ஒரு வணக்கம்
வைத்துவிட்டுப்
போவோமா?......
============= ===========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (15-Sep-14, 5:49 am)
பார்வை : 55

மேலே