பெயர்மறந்த நான்
நேற்று நான் புரட்டிய
உன் நாட்குறிப்பில்
உன் உணர்வுகள்
உதிரமாய் வழிந்தது.
பக்கங்களைப் புரட்டிய
என் விரல்களின்
நகக்கண்களும் அழுது
நனைந்தது.
என் நாடி நரம்புகள்
நிரந்தரமாய் அதிர்ந்ததில்
நிறைய ஓசைகளை உன்
நிராசை இசைத்தது
எழுத்துக்கள் தடுக்கி
வழுக்கி விழுந்த
உன் வரலாறு
எனக்கும் வலித்தது.
விசும்பிப் பிசுத்த
சிவப்புக் குருதியிலும்
உன் உறுதி
எனக்குள்ளும் உதித்தது.
ஆனாலும் கவலைப்படாதே
என் கண்மணி நான்
உன் அருகமர்ந்து
வருத்தம் விலக்குகிறேன்
இன்னும் எழுதப்படாத
வெள்ளைத் தாள்களில்
வண்ணமாய் விரியவே
காத்திருக்கிறேன் நான்.
தூரத்திலிருந்தாலும்
அன்பால் தழுவும்
உன் வார்த்தைகளில்
உனக்குள் என் சுவாசம்
பிரியமுடன்..
உன் .............................
நீயே நிரப்பிக்கொள்ள
வார்த்தைகளாய் உனக்குள்
மொழி பெயர்ந்த பெயர்மறந்த நான்.